சரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்


காமெடி படங்களுக்கு பெயர் போன இயக்குனர் எழில் மற்றும் சூரியுடன் உதயநிதி முதன்முறையாக கைகோர்த்துள்ள படம் தான் இந்த சரவணன் இருக்க பயமேன்’..

சின்ன வயது முதல் உதயநிதி, ரெஜினா இருவருக்குமே குடுமிப்பிடி சண்டை தான்.. சிறுவயதில் ஊரைவிட்டு போன ரெஜினா குடும்பத்தினர் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு வருகிறார்கள்.. இன்னும் பழைய கோபத்துடன் இருக்கும் ரெஜினா மீது இப்போது உதயநிதிக்கு காதல் வருகிறது.. ஆனால் ரெஜினாவோ பாராமுகம் காட்டுகிறார்.

உதயநிதியின் மாமனும் ரெஜினாவின் சித்தாப்பாவுமாகிய சூரி ஒரு வட இந்திய கட்சியின் தமிழக தலைவராக முயற்சிக்க, சூரியை தந்திரமாக துபாய்க்கு ஓட்டகம் மேய்க்க அனுப்பிவிட்டு இங்கே கட்சிப்பதவியை கைப்பற்றுகிறார் உதயநிதி.. அந்த கோபத்துடன் திரும்பி வரும் சூரி, உதயநிதியை பழிவாங்குவதற்காக ரெஜினாவை பக்கத்து ஊர் பண்ணையார் மன்சூர் அலிகான் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் வேலையில் இறங்குகிறார்.

ரெஜினா உதயநிதியின் காதலை கடைசி வரை ஏற்காத நிலையில் உதயநிதிக்கு அவரது இறந்துபோன தோழி சிருஷ்டி டாங்கேயின் ஆவி உதவுகிறது.. ஆனாலும் உதயநிதி மீதுள்ள கோபத்தில் அவரது திட்டங்களை உடைத்து, ரெஜினாவை மன்சூர் அலிகானின் மகனுக்கு கட்டிவைக்க முழு மூச்சாக இறங்குகிறார் சூரி.. அவரது திட்டங்களை முறியடித்து ரெஜினாவை கரம் பற்றினாரா உதயநிதி..? ரெஜினாவுக்கு அவர் மீது காதல் வந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

இதுவரை லைட்டான கேரக்டர்களில் மட்டுமே நடித்துவந்த உதயநிதி இந்தப்படத்தில் இன்னும் லைட்டான கேரக்டரை ஏற்றுக்கொண்டுள்ளார்.. அந்த கேரக்டரும் அவருக்கு ஒகே தான்.. சூரி, யோகிபாபு கூட்டணியுடன் சேர்ந்து அவ்வப்போது காமெடியும் பண்ணுகிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் காமெடியில் டெவலப் ஆகிவிடுவார் என நம்பலாம்.

ரெஜினாவின் சின்னச்சின்ன குறும்புகள் ரசிக்க வைக்கின்றன.. உதயநிதி தன்னைப்பற்றி நண்பர்களிடம்ம் பேசும்போது தனனது தம்பியின் காதுகளை போத்துவதற்கு பதிலாக கண்களை பொத்துவது செம காமெடி. கொஞ்ச நேரமே வந்தாலும் சிருஷ்டி டாங்கே மனதில் நிறைகிறார்.. ஆனால் பேயாக வந்து உதயநிதிக்கு ஹெல்ப் பண்ணுவது என முடிவெடுத்த பின் அதை புள் டைமாகவே பண்ணியிருக்கலாமே.

வித்தியாசமான கெட்டப்பில் சூரி.. வழக்கமாக ஹீரோவுக்கு நண்பராக வரும் சூரியை இந்தமுறை ஹீரோவுக்கு எதிராளாக மாற்றியிருந்தாலும் அவர் ஏரியாவில் அவர் புகுந்து விளையாடவெ செய்கிறார்.. ஆனால் ஒரு சில காமெடிகளை தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை என்பது பலவீனம்.. யோகிபாபு பாடிலாங்குவேஜ் ஓகே.. ஒன்லைனர் பஞ்ச்கள் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகின்றன..

ரோபோ சங்கர், ரவி மரியா, லிவிங்ஸ்டன், சாம்ஸ், மன்சூர் அலிகான், மனோபாலா, மதுமிதா என ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளம் இருந்தாலும் எல்லோருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினி முருகன் பாணியில் ஊர் பஞ்சாயத்தை ரெடி பண்ணி அதை பாட்டுக்கு பாட்டு மேடையாக மாற்றியது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.. கடைசி வரை ரெஜினாவின் காதல் இல்லாமலேயே படம் நகர்வதால் காதல் காட்சிகள் மனதில். ஒட்ட மறுக்கிறது..

இமானின் இசையில் ‘எம்புட்டு இருக்குது ஆச’ பாடல், படம் முடிந்தும் கூட நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. உதயநிதி மீது ரெஜினாவுக்கு காதல் வந்தால் அது வழக்கமான படம் ஆகிவிடும் என நினைத்து க்ளைமாக்ஸ் வரை அவர்களுக்குள் காதல் வராமல் பார்த்துகொண்டு இருக்கிறார் இயக்குனர் எழில்.. இன்னும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்கிற காமெடி ஹிட் படத்தை இயக்கிய எழிலின் படம் என்கிற எதிர்பார்ப்புடன் விழுந்து விழுந்து சிரிக்கலாம் என தியேட்டருக்கு வருபவர்களுக்கு இந்தப்படத்தில் பாதி தீனிதான் போட்டிருக்கிறார் எழில். ஆனாலும் பொழுதுபோக்கான படம் என்பதால் பயமில்லாமல் நம்பி டிக்கெட் போடலாம்.