சத்ரியன் – விமர்சனம்


தனது தந்தை தான் திருச்சியையே கலக்கும் ரவுடி என தெரியாமல் வளர்கிறார் மஞ்சிமா.. ஆனால் அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவரும்போது அவரது தந்தை எதிரிகளால் கொல்லப்பட்டு விடுகிறார். இந்தநிலையில் தனக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்ட ஒரு ரவுடி இளைஞன் விக்ரம் பிரபுவின் மீதே மஞ்சிமாவுக்கு காதல் பிறக்கிறது..

தனது அம்மாவும் அண்ணனும் தனக்கு பாடிகார்டாக விக்ரம் பிரபுவை நியமித்த தனது தந்தையின் வலதுகையாக இருக்கும் விஜய்முருகனும் என அனைவரும் இந்த காதலை எதிர்த்தாலும் காதலில் உறுதியாக நிற்கிறார் மஞ்சிமா. அந்த காதல் விக்ரம் பிரபுவை அசைத்து பார்க்கிறது.. இன்னொரு பக்கம் விக்ரம் பிரபுவை போட்டுத்தள்ள சமயம் பார்த்து காத்திருக்கிறார் எதிர் தரப்பு ரவுடியான அருள்தாஸ்.

உள்ளேயும் வெளியேயும் உள்ள எதிர்ப்புகளை சமாளித்து மஞ்சிமாவை விக்ரம் பிரபு கைபிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்..

திருச்சியையே தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வரவேண்டும் என்கிற உயர்ந்த லட்சியத்துடன் இருக்கும் விக்ரம் பிரபு எத்தனை துடிப்பாக இருக்க வேண்டும், ஆனால் பாதிப்படம் முழுவது மிகவும் மந்தமாகவே இருக்கின்றார். கதாபாத்திர வடிவமைப்பு பலவீனமாக இருந்தாலும் கூட, ஹீரோவாக தன் பங்கு வேலைகளை சரியாகவே செய்திருக்கிறார் விக்ரம் பிரபு.

கதாநாயகியாக மஞ்சிமா மோகன், நிரஞ்சனா எனும் கதாபாத்திரத்தில் ரசிகனின் நெஞ்சம் நிறைக்கிறார். தன் தந்தை மாதிரி காதலனும் ரவுடியிஸத்துக்கு காவு போய் விடக் கூடாது எனும் கவலையில் சின்ன புன்னகையும், சிநேக சிரிப்பு நிறைய அட்வைஸுமாக செம ஸ்மார்ட்.

ரவுடிகளில் விஜயமுருகன் செம ஸ்கோர் பண்ணுகிறார்.. அருள்தாஸுக்கும் அருமையான வாய்ப்பு.. பாவம் மிடுக்காக அறிமுகமாகும் சரத் லோகித்ஸ்வா தான் அல்ப நேரத்திலே உயிரை விடுகிறார். யோகிபாபுவை இரண்டு காட்சிகளில் மட்டுமே காட்டி வீணடித்துள்ளனர்.. இதில் வேட்டையன், ஐஸ்வர்யா தத்தா காதல் எபிசோட் தனி.

படத்தின் கதை மற்றும் சொல்ல வரும் கருத்து நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.