சீறு – விமர்சனம்


படத்தின் நாயகன் ஜீவா ஒரு தொலைக்காட்சி சேனலை நடத்தி வருகிறார். அவருடைய அலுவலகம் மாயவரத்தில் இருக்கிறது. நாயகன் ஜீவாவுக்கும், அந்த தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும் பகை ஏற்படுகிறது.

இதனால், ஆத்திரமடையும் எம்.எல்.ஏ, ஜீவாவை கொல்ல சென்னை வியாசர்பாடியின் பெரிய ரவுடியான வருணை மாயவரத்திற்கு அழைக்கிறார்.

இந்த விஷயம் ஜீவாவின் காதுகளுக்கு எட்டுகிறது. இருந்தாலும் ஜீவா பயப்படாமல் அந்த பெரிய ரவுடியான வருண் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று தைரியமாக இருக்கிறார்.

ஜீவாவை கொள்ள மாயவரம் வருகிறார் ரவுடி வருண். அப்போது பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ஜீவாவின் தங்கையை காப்பாற்றுகிறார் ரவுடி வருண்.

தன்னை கொல்ல வந்த இடத்தில், தன் தங்கையின் உயிரை காப்பாற்றிவிட்டு சென்ற வருணின் மனிதாபிமானத்தை நினைத்து பெருமைப்படுகிறார் ஜீவா.

வருணை தேடி சென்னைக்கு வருகிறார் ஜீவா. ரவுடிகளால் கத்தி குத்தப்பட்ட பலத்த காயமடைந்த வருணை காப்பாற்றுகிறார் நாயகன் ஜீவா. அது மட்டுமன்றி வருனை கொல்ல வந்தவர்களை பற்றி விசாரிக்கிறார் நாயகன் ஜீவா.

இறுதியில் வருணை கொல்ல வந்தவர்களை ஜீவா கண்டுபிடித்தாரா?, இந்த கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஜீவா ஆக்சன் காட்சிகளிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கை மீது பாசம் காட்டுவது, நட்புக்கு மரியாதை கொடுப்பது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.

நாயகியாக வரும் ரியா சுமன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் சதீஷ்.

ஒரு ரவுடிக்கு உண்டான தோற்றம், உடலமைப்பு என மல்லி கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார் வருண்.

மற்றொரு வில்லனாக ஒயிட் காலர் கிரிமினலாக வரும் நவ்தீப் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்.

ஆண்கள் மட்டும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, பெண்களும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரத்ன சிவா. அண்ணன் தங்கை பாசத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

மொத்தத்தில் ‘சீறு’ தரமான படம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *