சில்லுக்கருப்பட்டி – விமர்சனம்


ஒரே கருப்பொருளை மையமாகக் கொண்ட நான்கு வெவ்வேறு விதமான கதைகள். பால்ய வயது, இள வயது, நடுத்தர வயது, முதுமை என நான்கு வகையான வயதில் இருப்பவர்களைக் கொண்டு அழகிய கவிதையை படமாக தந்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

ப்ளு பேக் :

மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பை மேட்டில் குப்பை பொறுக்கும் பையன் ராகுல். அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்து குப்பை பொறுக்குவது அவர்களுடைய பொழுதுபோக்கு. ஒரு நாள் நீல நிற பை ஒன்று ராகுலுக்கு கிடைக்கிறது. அந்தப்பையினுள் இருக்கும் பொருள்கள் அவனுடைய மெல்லிய பால்ய உணர்வுகளை தட்டி எழுப்புகின்றன. தினமும் வரும் அந்தப் பையை பின் தொடர்கிறான் ராகுல். எதற்காக அதை பின் தொடர்கிறான்? அவனுடைய தேடல் முழுமை பெற்றதா? என்பதே ப்ளு பேக் குறும்படம்.
பையை பின் தொடர்வது, அவன்மீது அன்பு செலுத்தும் தோழி, காமெடிக்கு ஒரு நண்பன் என்று முதல் குறும்படமே நம்மை படத்துக்குள் ஈர்த்து விடுகிறது. குப்பை மேட்டை இதுவரை இப்படி காட்டியது இல்லை என்பதுபோல கேமரா கோணங்கள் இருக்கின்றன.

காக்கா கடி கதை :

இந்தக் கதையில் மணிகண்டன் – நிவேத்திதா நடித்துள்ளனர். மணியின் திருமணத்திற்கு நாள் குறித்து திருமண ஏற்பாடுகள் ஆரம்பத் தொடங்கியிருக்கிறது. அந்நேரத்தில் அவருக்கு ஏற்படும் சிறிய நோய் கேன்சராக உருவெடுக்கிறது. அதனால் அவரது திருமணம் நின்று விடுகிறது. அதனால் சோகத்தில் மூழ்குகிறார் மணி. அவருக்கு பேஷன் டிசைனராக உள்ள நிவேத்திதாவின் நட்பு கிடைக்கிறது. அது அவனுக்கு ஆறுதலாக உள்ளது. நிவேத்திதா – மணிகண்டனுக்கு இடையே மெல்லியதாக தொடங்கும் நேசம் வாடகை காரிலேயே காதலாக மாறும் காட்சிகள் நெகிழ வைக்கிறது.

டர்ட்டிள் வாக் :

டர்ட்டிள் வாக்கில் முதிய வயதில் இருக்கும் கிராவ்மகா ஸ்ரீராமும் லீலா சாம்சனும் நட்பாகிறார்கள். ஒரு தோழமையான சந்தர்ப்பத்தில் ஸ்ரீராம் தனது காதலை சொல்ல அதை லீலா சாம்சன் ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையா? என்பதே டர்ட்டிள் வாக் குறும்படம். தனித்து விடப்படும் முதியவர்களுக்கான தேவையை கச்சிதமாக சொல்லி இருக்கிறது இந்த குறும்படம்.

ஹே அம்மு :

ஹே அம்மு கதையில் சமுத்திரகனியும் சுனைனாவும் 3 குழந்தைகளுடன் வசிக்கும் நடுத்தரவர்க்க தம்பதி. இயந்திரத்தனமாக இருக்கும் கணவனிடம் இருந்து தனது முன்னாள் காதலனை கண்டுகொள்ள சுனைனா போராடுகிறார். அதற்கு உதவியது யார்? கனி எப்படி மாறினார்? என்பதே அம்முவின் கதை.

பால்ய காதலில் தேவைப்டும் தோழமை, இளவயது காதலில் உண்டாகும் தாய்மை, நடுத்தர வயது காதலில் தேவையான அரவணைப்பு, முதுமை காதலில் அவசியமான ஆறுதல் என நான்கு வயதினருக்கான தேவைகளையும் மிகவும் சுவாரசியமாக அலசி இருக்கிறது படம்.
அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி நால்வரின் ஒளிப்பதிவும் படத்தை விட்டு அகலாமல் பார்க்க வைக்கிறது. பிரதீப் குமாரின் இசை எந்த காட்சியிலும் உறுத்தாமல் படத்துடன் ஒன்றவைக்கிறது. ஹலீதாவின் படத்தொகுப்பு கச்சிதம்.

நான்கு படங்களுமே நம்மை சிரிக்க, ரசிக்க, நெகிழ, கண்ணீர் மல்க, உணர வைக்கின்றன. பிரபலங்களை நம்பாமல் ஹலீதா தன்னுடைய எழுத்தை மட்டுமே நம்பி சில்லுக்கருப்பட்டியை வழங்கி இருக்கிறார். அந்த எழுத்தை அப்படியே படமாக்கி நமக்கு ஒவ்வொரு குறும்படத்திலும் ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா வளம்பெற சில்லுக்கருப்பட்டிகள் இன்னும் நிறைய உருவாக வேண்டும்.
மொத்தத்தில் அருமையான படைப்பாக வெளிவந்துள்ளது ‘சில்லுக்கருப்பட்டி’