சிந்துபாத் – விமர்சனம்


விஜய்சேதுபதி, அருண்குமார் காம்பினேஷனில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் இந்த சிந்துபாத்.

மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் அஞ்சலி ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் சில பல நிகழ்வுகளுக்கு பின்னர் சரியாக காதுகேளாத விஜய்சேதுபதியுடன் காதலாகிறார். இந்த நிலையில் சம்பாதித்த பணத்தை திரும்பப் பெறுவதற்காக மலேசியா செல்லும் அஞ்சலி, விஜய்சேதுபதியின் கையால் தாலி கட்டிக் கொண்டு அவரது மனைவியாக செல்கிறார். ஆனால் விஜய்சேதுபதி மீது கோபம் கொண்ட அஞ்சலியின் மாமன், மலேசியா ஏஜென்டிடம் சொல்லி அஞ்சலியை இங்கே திரும்பி வர முடியாமல் மீண்டும் வேலைக்கான காண்ட்ராக்டில் இணைக்க சொல்லிவிடுகிறார்.

இதிலிருந்து தப்ப வேண்டும் என்றால் 5 லட்சம் கொடுத்தால் தான் முடியும் என அஞ்சலிக்கு தெரியவர, ஊருக்கு போன் செய்து விஜய் சேதுபதிக்கு தனது சிக்கலை சொல்கிறார். விரைவில் பணத்துடன் வராவிட்டால் தாய்லாந்துக்கு வேறு ஒரு வியாபாரப் பொருளாக அனுப்பப்பட்டுவிடுவேன் என்று கதறுகிறார். தனக்கு சொந்தமான வீட்டை விட்டு அந்த பணத்துடன், கூடவே தனது தம்பி போல வளர்த்துவரும் சூர்யாவையும் அழைத்துக்கொண்டு மலேசியா செல்கிறார் விஜய்சேதுபதி. சென்ற இடத்தில் அவருக்கு பல சிக்கல்கள் எதிர்பாராமல் ஏற்பட, குறித்த நேரத்தில் பணத்தைக் கொண்டு போய் சேர்த்து அஞ்சலியை மீட்டாரா..? இல்லை வேறுவிதமான சிக்கலில் சிக்கி தான் நினைத்து வந்த காரியத்தை அவரால் முடிக்க முடியாமல் போனதா என்பது மீதிக்கதை.

அரைகுறையாக காது கேட்கும் தனது கதாபாத்திரத்தை வெகு அழகாக பிரதிபலித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அதேசமயம் முதல் பாதி முழுவதும் எதார்த்தமாக காட்சி அளிக்கும் அவர், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் ஹீரோவாக அதுவும் மொழி, ஊர்பெயர் தெரியாத வெளிநாட்டில் பட்டையைக் கிளப்புகிறார் என்பது நம்பும்படியாக இல்லை. விஜய்சேதுபதியின் தம்பியாக படம் முழுவதும் கூடவே வரும் கதாபாத்திரத்தில் அவரது மகன் சூர்யா.. அவரும் தந்தையைப் போலவே யதார்த்தமான நடிப்பால் நம்மை வசீகரிக்கிறார்.

கத்திக்கத்தி பேசும் கதாநாயகியாக அஞ்சலி, விஜய்சேதுபதியுடன் ரொமான்ஸில் மிகுந்த ஈடுபாடு காட்டினாலும், இன்னும் எங்கேயும் எப்போதும் டீச்சர் தன்மையில் இருந்து அவர் முழுவதுமாக வெளிவரவில்லை என்றே சொல்ல வேண்டும். மலேசிய மிரட்டல் வில்லனாக லிங்கா.. அவரை கொடூரமானவராக பில்டப் செய்து காட்டினாலும் விஜய்சேதுபதி அவர் கண்களில் மண்ணைத்தூவி ஆடும் சதுரங்க ஆட்டத்தில் அவர் சிக்கிக்கொள்ளும் போதெல்லாம் இவ்வளவு பில்டப் அவருக்குக் கொடுத்து இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

லின்காவிடம் இருந்து தப்பிக்க விஜய்சேதுபதியும் சூர்யாவும் படும் பாடு சில நேரங்களில் நம்மையும் சேர்ந்து கஷ்டப்படுத்துகிறது. குறிப்பாக 40 மாடி உயர கட்டடத்தில் இருந்து விஜய் சேதுபதியும் சூர்யாவும் தப்பிக்க மேற்கோளும் முயற்சிகள் நம் மனதை படபடக்க வைக்கின்றன. கொத்தடிமையாக இருக்கும் மகளை மீட்க பணத்துக்காக சிரமப்படும் விவேக் பிரசன்னா நெகிழ வைக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓரளவு பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என எதார்த்தமான படங்களை தந்த இயக்குனர் அருண்குமார், இந்தப்படத்தில் இடைவேளை வரை அந்த யதார்த்தத்தை கடைபிடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் அதை காற்றில் பறக்க விட்டுவிட்டார். இந்த படத்தின் பல காட்சிகள் ஜூங்கா படத்தில் பார்த்தது போலவே இருப்பது படத்திற்கு பலவீனம். மலேசியாவில் அவ்வளவு பெரிய ஆள் பலம், படை பலம் கொண்ட வில்லனையும் அவரது ஆட்களையும் விஜய்சேதுபதி ஈஸியாக சமாளிப்பது என்பதை லாஜிக்காக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. படத்தின் ஆரம்பத்தில் இருந்தே கதையில் அப்படி நடந்திருந்தால் ஒருவேளை நமக்கு நம்பிக்கை வந்திருக்குமோ என்னவோ… படம் பார்க்கும் ரசிகர்களான உங்களுடைய பார்வைக்கே அதை விட்டு விடுகிறோம்.