சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்


இத்திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் போக்குவரத்து அதிகாரியாக நடித்திருக்கிறார். போக்குவரத்து அதிகாரி வேடத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இது படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

தாய் தந்தை இல்லாமல் வளரும் அக்கா, தம்பியாக ஜி.வி.பிரகாஷூம், லிஜோ மோலும் நடித்துள்ளனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பைக் மீது அதீத ஆர்வத்துடன் வளரும் ஜி.வி. பிரகாஷ் வாலிபனானதும் பைக் ரேஸ் ஓட்டும் பழக்கம் ஏற்படுகிறது.

அவ்வாறு ஒரு நாள் ஜி.வி. பிரகாஷ் பைக் ரேசில் ஈடுபட்டிருக்கும் போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டிக் கொள்கிறார். அப்போது ஏற்படும் அவமானத்தால் சித்தார்த் மீது கோபமாகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில் சித்தார்த்தே தனது அக்கா லிஜி மோலுக்கு மாப்பிள்ளையாக வர ஜி.வி. பிரகாசுக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் லிஜிமோலுக்கு சித்தார்த்தை பிடித்துப்போக திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
ஒரு சமயத்தில் ஜி.வி.பிரகாஷ், அக்காவிடம் சித்தார்த்தால் தனக்கு நடந்த அவமானத்தை சொல்ல, அவரும் மனதை கல்லாக்கிக் கொண்டு, சித்தார்த்தை வெறுக்கிறார்.

இந்நிலையில், சித்தார்த்தும் ஜி.வி.பிரகாஷுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? எப்படி சமாளித்தார்கள்? சித்தார்த்தும், லிஜோமோலும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தின் முதல் பாதியை காமெடி கலந்தும், இரண்டாம் பாதியை செண்டிமென்ட்டாகவும் இயக்கியுள்ளார் இயக்குநர் சசி. இவர் ஏற்கனவே பிச்சைக்காரன் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்திருக்கிறார்.

இதில் மாமன் மச்சான், உறவை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் சசி. மேலும் இன்றைய இளைஞர்களின் பொறுப்பில்லா தன்மை மற்றும் அவசர உலகின் பயணத்தையும் கூறியிருக்கிறார்.

லிஜிமோல் காதல், பிரிவு, வேதனை என நடிப்பின் அனைத்துப் பரிமாணங்களிலும் பளிச்சிடுகிறார். சித்தார்த் தனது நடிப்பில் மேலும் ஒருபடி முன்னேறியிருக்கிறார்.

மொத்தத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்திற்கு ரசிகர்கள் க்ரீன் சிக்னல் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.