சிக்ஸர் ; விமர்சனம்


சிவில் இஞ்ஜினியரான நாயகன் வைபவுக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இந்தநிலையில் இவரது அப்பா இளவரசும், அம்மா ஸ்ரீரஞ்சனியும் வைபவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்கள். ஒருநாள் மாலை வைபவ் பீச்சில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறு அமர்ந்திருக்கிறார். அப்பொழுது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியையை கைது செய்யக்கூறி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அரசியல்வாதியான என்.ஆர்.மனோகரின் ஆட்கள் போலீஸ் உதவியுடன் ஆர்பாட்டகாரர்களை விரட்ட முயற்சிக்கிறார்கள்.

இதற்கு பயந்து பிறர் கலைந்து சென்றாலும், வைபவ் மட்டும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார். வைபவின் துணிச்சலை பார்த்த ஆர்பாட்டக்காரர்கள் மீண்டும் ஒன்று திரள்கின்றனர். இதனால் ஆர்பாட்டம் வெற்றி பெறுகிறது. இதையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அனைவரும் வைபவை பாராட்டுகின்றனர். அங்கு செய்தி சேகரிக்க வரும் நாயகி பல்லக் லல்வானிக்கு, வைபவ் மீது காதல் வர இந்த ஒரு காட்சி போதாதா..?

ஆனால் தனக்குள்ள குறையை மறைத்து வைபவும் அவரை காதலித்து வருகிறார். இன்னொரு புறம் அந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி என்.ஆர்.மனோகர் வைபவை கொல்லத் துடிக்கிறார். மாலைக்கண் நோயால் ஏற்படும் பிரச்சனைகளை தாண்டி அவர் காதலில் ஜெயித்தாரா? அரசியல்வாதியிடம் இருந்து உயிர் தப்பினாரா? என்பதே மீதிக்கதை.

சின்னத்தம்பி படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்த கதாபாத்திரத்தை முழுநீள பத்மக மாற்றி இருக்கிறார்கள். வைபவ் மாலைக்கண் நோய் உள்ள இளைஞர் கதாபாத்திரத்தை எளிதாக கையாண்டு இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான வெகுளித்தனமான முகம் இவருக்கு அழகாக பொருந்தி இருக்கிறது. அனால் நடிப்பில் தன செயற்கைத்தனம் அதிகம்.

தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் நாயகி பல்லக் லல்வானி, அழகு பதுமையாக வலம் வருகிறார். ராமர், சதீஷ் ஆகியோர் அவ்வப்போது வந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கவில்லை. மேலும் இளவரசு, ராதாரவி அனுபவ நடிப்பால். நம்மை ரசிக்க வைக்கிறார்கள். என்.ஆர்.மனோகர் வில்லத்தனத்தால் மிரட்டுகின்றார்.

அறிமுக இயக்குனர் சாச்சி, மாலைக்கண் நோய் என்பதை கதையின் கருவாக கொண்டு படத்தை நகைச்சுவையாக நகர்த்திய விதம் சிறப்பு. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், பாடல்கள் ஓகே ரகம் தான். பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.