ஸ்பைடர் – விமர்சனம்


அரசாங்கத்தின் உளவுப்பிரிவில் போன்கால்களை ட்ரேஸ் அவுட் பண்ணும் பணியில் இருப்பவர் மகேஷ்பாபு.. அதன்மூலம் இக்கட்டில் மாட்டிக்கொண்ட பலரை காப்பாற்றியும் வருகிறார். ஒருநாள் நள்ளிரவில் ஒருபெண் தனியாக இருப்பதாகவும், வீட்டில் யாரோ நடமாடுவதுபோல உணர்வதாகவும் பேசும் போன்காலை ட்ரெஸ் செய்யும் மகேஷ்பாபு, அவருக்கு துணையாக இருக்க தனக்கு தெரிந்த பெண் போலீசை அனுப்பி வைக்கிறார். மறுநாள் இருவரும் பிணமாக வீதியில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார் மகேஷ்பாபு..

இந்த கொலைகளின் பின்னணியை ஆராயத்துவங்கும் மகேஷ்பாபு, முதலில் பரத்தும், அவரை தொடர்ந்து அவரது அண்ணன் எஸ்.ஜே.சூர்யாவும் இதில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடிக்கிறார். மேலும் அவர்கள் எண்ணற்ற கொலைகளை நிகழ்த்தியதும், இன்னும் நிகழ்த்த இருப்பதும் மகேஷ்பாபுவுக்கு தெரிய வருகிறது. பரத்தை பிடித்து, அவரைக்கொன்று, எஸ்.ஜே.சூர்யாவை கோபமேற்றுகிறார்.

கோபத்துடன் வெளிப்படும் எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தடுத்த செயல்கள் மிக பயங்கரமாக இருக்கின்றன.. இவற்றை மகேஷ்பாபு எப்படி சமாளிக்கிறார்..? மேலும் பாதிப்பு நேராமல் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதிப்படம்..

ஹீரோ-வில்லன் இருவருக்குமே சம வாய்ப்பு கொடுத்து திரைக்கதையை வடிவமைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். மகேஷ்பாபு ரொமான்ஸ் தவிர மற்ற ஏரியாக்களில் புகுந்து விளையாடுகிறார். இடைவேளை நேரத்தில்தான் என்ட்ரி கொடுத்தாலும் சைக்கோ வில்லன் கேரக்டரில் நூறு சதவீதம் சரியாக பொருந்தி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மற்றவர்களின் மரணத்தில் சந்தோசம் காணும் அவரது சைக்கோத்தனமும் அப்படி அவர் மாறியதற்கான பின்னணியும் நிஜமாகவே அதிர வைக்கிறது.

பரத் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தது சரியா, தவறா என்பதை விட, தனது கேரக்டர் தேர்வை நியாயப்படுத்தும் விதமாக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதே உண்மை. ரகுல் பிரீத் சிங் டிபிகல் கதாநாயகியாக மட்டுமே வந்துபோகிறார். ஆர்.ஜே.பாலாஜி, ஹீரோவின் கட்டளைகளை நிறைவேற்றும் நண்பனாக கச்சிதம். ஜெயபிரகாஷ், நாகிநீடு, சாயாஜி ஷிண்டே ஆகியோர் வருகிறார்கள்… போகிறார்கள் அவ்வளவே..

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல் காட்சிகளில் மனம் ஒன்றவில்லை ஆனாலும் பின்னணி இசையில் வில்லத்தனத்தை கொண்டு வந்த விதம் பாராட்ட வைக்கிறது. பாறை உருண்டு வரும் காட்சி, மருத்துவமனை இடிந்து விழும் காட்சிகளில் சந்தோஷ் சிவனின் கேமரா டபுள் டூட்டி பார்த்திருக்கிறது. பரத்தை ட்ரேஸ் அவுட் செய்யும் டெக்னிக் எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து தனது அம்மாவை காப்பாற்றும் சாதுர்யம் ஆகியவை படத்தின் சுவாரஸ்யமான விஷயங்கள்.

டிவி நிகழ்ச்சியை வைத்து வில்லனை பிடிக்க வலைவிரிப்பது விறுவிறுப்பு தான் என்றாலும் பெண்களின் சாகச காட்சிகளுக்கு பதிலாக மகேஷ்பாபு அன் டீம் களத்தில் இறங்கியிருந்தால் நம்பகத்தன்மை அதிகரித்து இருக்கும். தெலுங்கு திரையுலகத்தை போல இங்கேயும் பாடல் காட்சிகளை இடையிடையே ஸ்பீட் பிரேக்கர்களாக பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்

இப்படி சில லாஜிக் குறைகள் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு எந்த இடத்திலும் குறையாமல் பார்த்துக்கொண்டுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.. இந்த திரைப்படத்தின் அனைத்து காட்சிகளையும் ஆந்திராவில் எடுத்து விட்டு தமிழுக்காக சென்னை என மாற்றாமல் ஆந்திராவில் நடந்தபடியே காட்டியதற்கும் கதாநாயகனை விட வில்லனுக்கு வலிமை சேர்ப்பது திரைப்படத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டதற்கும் பாராட்டுக்கள்…

ஆனால் முருகதாஸின் முந்தைய படங்களை பார்க்கும்போது இதில் சொல்லிக்கொள்ளும் விதமாக அவரது முத்திரை இல்லை என்பதே நிதர்சனம்