சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்


ஆரண்ய காண்டம் என்கிற ஒரே படத்தின் மூலம் சினிமாவை அணுவணுவாக ரசிக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு அவரது இரண்டாவது படமாக பிரபல நட்சத்திரங்களையும் சேர்த்துக்கொண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது இந்த சூப்பர் டீலக்ஸ்.

மொத்தம் நான்கு கதைகள்.. அதில் ஒன்றிரண்டு மட்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடன் இருப்பது போன்று, அதேசமயம் ஆந்தாலாஜி படம் என்று சொல்ல முடியாத வகையில் ஒரு புது உத்தியில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.

கணவன் வெளியே சென்ற நேரத்தில் காதலனை வரவழைத்து உல்லாசமாக இருக்கிறார் சமந்தா. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக காதலன் மரணித்து விட, வீட்டிற்கு வரும் கணவன் பஹத் பாசிலிடம் ஒளிவு மறைவு இல்லாமல் விஷயத்தை சொல்கிறார் சமந்தா. ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் அதன் பிறகு இறந்துபோன உடலை வெளியே கடத்த திட்டமிட்டு அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் அவர்களது எபிசோடின் கதை.

காயத்ரியை திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி திருமணமான சில நாட்களிலேயே ஊரைவிட்டு ஓடியவர், ஏழெட்டு வருடங்கள் கழித்து திரும்பி வருகிறார். அவரது வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது மகன் தனது தந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்று தனை இகழ்ந்து பேசும் சக மாணவர்களுக்கு காட்ட ஆவலாக இருக்கிறான்.. ஆனால் வந்தவர் ஒரு திருநங்கையாக திரும்பி வந்தது கண்டு, குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தாலும், பையன் மட்டும் தனது அப்பா தானே என்கிற கண்ணோட்டத்திலேயே அவரை அணுகுகிறான். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி சந்திக்கும் அவமானங்களும் பிரச்சினைகளும் அதையடுத்து அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் அவரைப் பற்றிய கதையாக சொல்லப்படுகிறது.

இதேபோன்று ஐந்து சிறுவர்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு திருட்டுத்தனமாக ஆபாச படம் பார்க்க ஒன்று கூறுகின்றனர் அப்படி பார்க்கும் படத்தில் நண்பர்களில் ஒருவரின் தாயான ரம்யா கிருஷ்ணன் நடித்து இருப்பது கண்டு அவரது மகன் அதிர்ச்சி அடைந்து ஆவேசத்தில் நண்பன் வீட்டு டிவியை உடைத்து விட்டு, கோபத்துடன் தனது தாயை கொல்ல ஓடுகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிருக்குப் போராட, அவனை காப்பாற்ற அவரது தாயான ரம்யா கிருஷ்ணன் பணத்திற்காக போராடுகிறார். தந்தை மிஷ்கினோ தான் நம்பும் கடவுள் அவரை காப்பாற்றுவார் என பிரார்த்தனையிலேயே நேரத்தை செலவழிக்கிறார். பையன் பிழைத்தான் என்பது இவர்கள் பிரச்சனை.

இதில் கிளைக்கதையாக டிவி உடைந்ததால் அப்பா திட்டுவார் என புது டிவி வாங்குவதற்காக பணம் தேடி மீதமுள்ள நண்பர்கள் தங்காளுக்கு தென்படும் தவறான வழியில் செல்கிறார்கள்.. அங்கே அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அனுபவங்களும் படிப்பினைகளும் அவர்களது கதை

இப்படி நான்கு விதமான கதைகளை புதிய பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. நடிப்பு என வரும்போது திருநங்கையாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி காதலனை வீட்டுக்கு வரச்சொல்லி மேட்டர் பண்ணும் சமந்தா, அந்த விஷயத்தை கேள்விப்பட்ட பின்னும் கோபத்துடன் மனைவிக்கு உதவ நினைக்கும் கணவனாக பஹத் பாசில் விலைமாது தான் என்றாலும் தனது செயலை நியாயப்படுத்தும் ரம்யா கிருஷ்ணன் என நால்வருமே இமேஜ் பார்க்காமல் நடித்துள்ளனர்.. தாராளமாக சபாஷ் சொல்லலாம்.

கூடவே மகனை கடவுள் காப்பாற்றி விட மாட்டாரா என்ன பிரார்த்தனை ஒன்றே பலனளிக்கும் என நம்பும் மிஷ்கின், அவரது உதவியாளராக வரும் ராமசாமி, எப்படியாவது பணம் சம்பாதித்து விடவேண்டும் என்பதற்காக தேவையில்லாத சங்கடங்களில் சிக்கிக்கொள்ளும் அந்த இளைஞர்கள் என எல்லோருமே தங்களது நடிப்பில் ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசம் காட்டவே செய்திருக்கிறார்கள்.

காமெடி கலந்த வில்லத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் ஓவர் ஆக்டிங்கை சற்று குறைத்திருக்கலாம். விஜய்செதுபதியிடமும் சமந்தாவிடமும் அவர் நடந்துகொள்ளும் விதம் பெரும்பாலும் அருவருப்பு ஊட்டுவதாகவே இருக்கின்றன அதற்கு இயக்குனர் தான் பொறுப்பு என்பதால் அவரை மன்னித்து விடலாம்.

இயக்குனரின் இந்த புதிய முயற்சிக்கு யுவன்சங்கர் ராஜாவின் இசையும் நீரவ் ஷா மற்றும் பி.எஸ்.வினோத் மற்றும் ஆர்ட் டைரக்டரின் கலை வண்ணமும் கைகொடுத்து இருக்கின்றன. கதையின் பல காட்சிகள் தொண்ணூறுகளில் நடப்பது போலவும் சில காட்சிகள் தற்போதைய காலகட்டத்தில் நடப்பது போலவும் காட்டப்பட்டிருப்பது முரண்பாடாக தெரிகிறது.

சில இயக்குனர்கள் ரசிகர்களுக்காக படமெடுப்பார்கள்.. சில இயக்குனர்கள் தங்களது திருப்திக்காக மட்டுமே பணம் எடுப்பார்கள்.. அப்படிப்பட்ட படங்களில் சில நடிகர்கள் தங்களது திருப்திக்காக மட்டுமே நடிப்பார்கள்.. அப்படிப்பட்ட இயக்குனரும் சில நடிகர்களும் திருப்திப்பட்டு எடுக்கப்பட்ட படமாகத்தான் இந்த சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்க்க முடிகிறது படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் அவரவர் மனநிலைக்கு ஏற்ப இதை எப்படி ரசிப்பார்களோ அது அவர்களுக்கே வெளிச்சம்