டகால்டி – விமர்சனம்


மும்பை மாநகரில் சின்ன சின்ன திருட்டுக்களை செய்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் நாயகன் சந்தானம்.

இந்நிலையில் ஒரு தொழிலதிபர் தனக்கு தோன்றிய பெண் உருவத்தை வரைந்து அப்பெண்ணை கண்டுபிடித்து தரும்படி பிரபல ரவுடிகளிடம் ஒப்படைக்கிறார். அந்த புகைப்படம் பிரபல ரவுடியான ராதாரவியிடம் வந்து சேருகிறது.

ஏற்கனவே ஒரு பிரச்சனையில் சந்தானத்தை கொள்ளத் துடிக்கிறார் ராதாரவி. ராதாரவியிடம் இருந்து தப்பிக்க நாயகன் சந்தானம் அந்த புகைப்படத்தில் உள்ள பெண்ணை தனக்கு தெரியும் என்று கூறுகிறார். உடனே ராதாரவியும் ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் அந்தப் பெண்ணை தன்னிடம் ஒப்படைத்தால் சந்தானத்தை கொல்லாமல் விட்டு விடுவதாக கூறுகிறார்.

இதை ஏற்றுக்கொண்ட சந்தானம் தனக்கு தெரியாத பெண்ணை கண்டுபிடித்தாரா?ராதாரவியிடம் ஒப்படைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் தனக்கே உரிய ஒன் லைன் காமெடி, டைமிங் காமெடி என ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். யோகி பாபுவும் சந்தானமும் சேர்ந்து ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்திருக்கிறார்கள். இருவருக்குமிடையேயான காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

நாயகி ரித்திகா சென் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் நாயகி ரித்திகாவை ஏமாற்றி அழைத்து வரும் காட்சி ரசிக்க வைத்திருக்கிறது.

ராதாரவி தனது அனுபவ நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த், சந்தானம்-யோகி பாபு கூட்டணியை கையாண்ட விதம் மிக சிறப்பு. திரைக்கதையில் இன்னும் காமெடி காட்சிகளை அதிகமாக வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் காமெடி கலாட்டாவாக வெளிவந்துள்ளது இந்த “டகால்டி”.