தவம் – விமர்சனம்


படத்தின் நாயகி பூஜாஸ்ரீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த தனியார் நிறுவனத்தின் முதலாளியின் வீட்டு திருமணத்திற்காக அன்னவயல் என்ற கிராமத்திற்கு தனது அலுவலக நண்பர்களுடன் நாயகி பூஜாஸ்ரீ செல்கிறார்.

அங்கு பூஜாஸ்ரீ வசியை சந்திக்கிறார். வசி திருமண ஏற்பாடுகள் செய்து தரும் ஏ டூ இசட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அதே ஊரில் இருக்கும் விஜயானந்தை பார்த்து அந்த ஊரே பயப்படுகிறது. காரணம் அவர் பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஊரே பார்த்து பயப்படும் விஜயானந்தை நாயகி பூஜாஸ்ரீ துணிச்சலாக காவல்துறையில் சிக்க வைக்கிறார். இதனால் கோபமடையும் வில்லன் விஜயானந்த் தனது அடியாட்கள் மூலம் பூஜாஸ்ரீயை கொல்ல முயற்சிக்கிறார். அடியாட்கள் கும்பல் நாயகி பூஜாஸ்ரீயை கொல்ல துரத்துகிறது.

இந்த நிலையில் வசியின் தந்தையும் அந்த ஊரின் விவசாய போராளியுமான சீமான் மகன் கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது.

விவசாயப் போராளியான சீமான் கொல்லப்பட என்ன காரணம்? பூஜாஸ்ரீக்கும் வசிக்கும் என்ன தொடர்பு என்ன? நாயகி பூஜாஸ்ரீக்கு அந்த கிராமத்துடனான பூர்வீக தொடர்பு என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.

அறிமுக நாயகன் வசி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை வசிகரிக்கிறார். அறிமுக நடிகர் என்று சொல்ல முடியவில்லை. கிராமத்து கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தியிருக்கிறார்.

நாயகி பூஜாஸ்ரீ படத்தின் தூணாக இருந்து கதையை தாங்கும் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

தனது கம்பீரமான நடிப்பால் சீமான் ரசிகர்களைக் கவர்கிறார். விவசாயத்தின் அருமை பற்றி சீமான் பேசும் வசனங்கள் இன்றைய சமூகத்துக்கு அவசியமான பாடங்கள். சீமான் வரும் காட்சிகள் படத்தை வலுவாக்குகின்றன.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கிராமத்து காட்சிகளை ரம்மியமாக படம் பிடித்து நம் கண் முன்னே நிறுத்துகிறார்.

விவசாயத்தை மையமாக பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தவம் திரைப்படம் விவசாயத்தின் வலிமையை நமக்கெல்லாம் உணர்த்துகிறது. மொத்தத்தில் தவம் திரைப்படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் படமாக வந்துள்ளது.