திறப்புவிழா – விமர்சனம்


குடிக்கு எதிராகவும் டாஸ்மாக் கடைகளை மூடசொல்லியும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துவரும் வேளையில் இப்போது வெளியாகியுள்ள திறப்பு விழா படமும் குடியை ஒழிக்கும் விழிப்புணர்வு பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளது.

வெளியூரில் இருந்து கிராமம் ஒன்றின் டாஸ்மாக் கடையில் வேளைக்கு சேர்கிறார் இளைஞர் ஜெயா ஆனந்த்.. வேலைதான் டாஸ்மாக் கடையில் என்றாலும் குடிக்கெதிராக விழிப்புணர்வு வேலைகளில் ஈடுபடுகிறார்.. குடியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு குடிகாரர்களின் காசை வைத்தே புத்திசாலித்தனமாக உதவுகிறார்.

ஆனால் டாஸ்மாக் அருகில் பார் வைத்து நடத்துபவர் ஜெயா ஆனந்தின் விரோதியாக மாறுகிறார். ஜெயா ஆனந்தை காதலிக்கும் உள்ளூர் பெண் ரெஹானாவின் தந்தை ஜி.எம்.குமார் குடியால் இறக்க, அந்த மரணத்திற்கு காரணம் என ஜெயா ஆனந்தை பலிகடா ஆக்கி சிறைக்கு அனுப்புகிறார்.

சிறையில் இருந்து வெளிவரும் ஜெயா ஆனந்தை ஊர் மக்கள் வெறுக்க, தான் யார் எதனால் டாஸ்மாக் பணியில் சேர்ந்தேன் என தந்து அதிரவைக்கும் பிளாஸ்பேக்கை சொல்கிறார். உண்மை உணர்ந்த மக்கள், ஜெயா ஆனந்துடன் கைகோர்த்து மதுக்கடைக்கு எதிராக போராட கிளம்புகிறார்கள்.. அவர்கள் முயற்சி பலித்ததா என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.

கதாநாயகனாக நடித்துள்ள ஜெயா ஆனந்த் புதியவர் என்பதால் நிறைய காட்சிகளில் கொஞ்சம் தடுமாறவே செய்தாலும் படத்தின் கதையோட்டம் அவரை விழாமல் தாங்கி பிடிக்கிறது. பல படங்களில் நாயகியாக நடித்த மனிஷா ஜித் இந்தப்படத்தில் அழகான கிராமத்து இளம் சிட்டு ரெஹானாவாக மாறி நம்மை கவர்கிறார்.. குடிக்கு எதிராக களத்தில் போராட இறங்கும் புதுமை பெண்ணாக அதிரவைக்கவும் செய்கிறார்.

ஜி.எம்.குமார், பசங்க சிவக்குமார், பாவா லட்சுமணன் என்று அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். படத்தின் கதையோட்டத்தை தடைசெய்யாத வகையில் வசந்த் ரமேஷின் இசையில் பாடல்களும் ஓரளவுக்கு ரசிக்க வைக்கின்றன.

அறிமுக இயக்குனர்களுக்கே உண்டான படமாக்குதலில் தடுமாற்றம் காணப்பட்டாலும், டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை கையிலெடுத்து அவற்றுக்கு மூடுவிழா காணவேண்டியதன் அவசியத்தை இந்த திறப்பு விழா படம் மூலம் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வீரமணி.

நல்லெண்ண சிந்தனையுடன் இந்தப்படத்தை இயக்கிய இயக்குனரையும் தயாரித்த எம்.ஜெரினா பேகத்தையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை.