துப்பறிவாளன் – விமர்சனம்


நாவல்களில் மட்டுமே படித்துவந்த டிடெக்டிவ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து நீண்ட நாளைக்குப்பிறகு வெளியாகி இருக்கும் படம் தான் துப்பறிவாளன்.

தனது நாய்க்குட்டி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோனதை சொல்லி, சுட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு துப்பறிவாளன் விஷாலிடம் கேட்கிறான் சிறுவன் ஒருவன். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல ஒன்றைத்தொட்டு ஒன்றாக பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவருகின்றன. பலம் வாய்ந்த வில்லன்கள் இதன் பின்னணியில் இருப்பதும் தெரியவருகிறது. கூடவே விஷாலின் நடவடிக்கைகளை முடக்க, எதிரிகள் ஆத்திரத்துடன் களமிறங்குகின்றனர்.. முடிவில் ஜெயம் யாருக்கு என்பது க்ளைமாக்ஸ்.

நடை உடை, பேச்சு, ஸ்டைல் என எல்லாவற்றிலும்கிட்டத்தட்ட ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிவாளனாகவே மாறியிருக்கிறார் விஷால்.. இதற்கு முந்தைய படங்களில் இருந்து இந்த கனியன் பூங்குன்றன் கேரக்டர் நூறு சதவீதம் தனித்து தெரிகிறது விஷாலின் வலதுகையாக பிரசன்னாவுக்கு கூடக்குறைச்சல் இல்லாத நேர்த்தியான கேரக்டர்.. கதாநாயகியாக மலையாள வரவு அனு இம்மானுவேல், அவ்வப்போது புன்னகை முகத்துடன் தோன்றி, பரிதாபமான முடிவை தேடிக்கொள்கிறார்.

ஹீரோக்களை எல்லாம் வில்லனாக்கி அழகு பார்ப்பதுதானே மிஷ்கினின் பணி.. இதிலும் அதற்கு குறை வைக்காமல் வினய், பாக்யராஜ் என வில்லன் டீமில் சேர்த்திருக்கிறார்.. போதாக்குறைக்கு ஆண்ட்ரியாவையும்.. இடைவேளை வரை இந்த டீமுக்கு பெரிதாக வேலை இல்லாவிட்டாலும், இடைவேளைக்குப்பின் மிரட்டலாக வேலை பார்த்திருக்கின்றனர். சிம்ரன் இரண்டே இரண்டு காட்சிகளில் வந்து போவதால் அவரைப்பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஜான் விஜய் கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல்.

அரோல் குரோலியின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் யார் என கேட்க வைக்கிறார் கார்த்திக் வெங்கட்ராமன்.. தமிழ்சினிமாவில் புதிய முயற்சிகளை, புதிய கோணங்களில் கையாளும் மிஷ்கின் இந்தப்படத்தில் ரசிகனை உற்சாகப்படுத்தவே செய்கிறார். ஒரு சிக்கலான வழக்கை துப்பறியும்போது ஏற்படும் அனைத்து சங்கடங்களையும் சவால்களையும் மிகைப்படுத்தாமல் காட்சிப்படுத்தியுள்ளார் மிஷ்கின்..

சில இடங்களில் லாஜிக் மீறல்கள் தெரிந்தாலும் அவை கதையின் வேகத்தை பெரிதாக பாதிக்கவில்லை. வினய்-பாக்யராஜ் பேக்ரவுண்ட் பற்றி கிளியர் கட்டாக சொல்லாதது இன்னொரு குறை.. படுத்த படுக்கையாய் கிடக்கும் மனைவிக்கு பணிவிடை செய்யும் பாக்யராஜா அவ்வளவு கொடூரமானவர்..? நம்பவே முடியவில்லை.

காட்சிக்கு காட்சி விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருப்பதாலும், கதை புதிய களத்தில் பயணிப்பதாலும் ரசிகனை உற்சாகப்படுத்த நிறைய அம்சங்கள் இந்தப்படத்தில் உண்டு.. இனி நீங்கள் டிக்கெட் போட வேண்டியதுதான் பாக்கி..