உறியடி விமர்சனம்

இந்த மாதிரி நாலுபேரு கிளம்பிட்டாய்ங்கன்னா போதும், சாதிக்கட்சிகள் இல்லாத தமிழ் நாட்டைப் பார்த்துவிடலாம்.

கல்லூரிக்கும் –படிப்புக்கும் – எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று, மது –புகை ஜாலியாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நான்கு இன் ஜினியரிங் மாணவர்கள். நான்கு பேரும் வேற வேற சாதி. தன் நண்பனைக் கொன்றுவிட்டான் என்கிற ஒரே காரணத்திற்காகவும், இவர்களால் இதுபோன்று அப்பாவிகள் எதிர்காலத்திலும் பலியாகிவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்திலும், தாங்கள் சார்ந்த கட்சித்தலைவனையே வேரறுக்கிறார்கள்.

பள்ளியிலோ கல்லூரியிலோ மாணவர்களாக இருக்கும் போது மச்சான் மாப்ள தான். நீ என்ன சாதி..? நான் இன்ன சாதி என்று எவனும் விசாரித்துவிட்டு நட்புபாராட்டுவதில்லை. என்னைக்கு அந்த காம்பவுண்ட விட்டு வெளியே வர்றானோ அன்றிலிருந்துதான் சாதி சனியன் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது.வேலைவாய்ப்புக்கு சாதிச்சன்றிதழ் கேட்டு அலையும் போதுதான் பலபேருக்கு நாம் இன்ன சாதி என்கிற விஷயமே தெரிகிறது.

உறியடி, சாதிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போது விழும் சவுக்கடி அல்லது சாவடி என்றுகூடச் சொல்லலாம்.

உறியடியை எழுதி இயக்கி தயாரித்ததோடல்லாமல் கதாநாயகன் வேடம் ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார் விஜயகுமார். கே.பாக்யராஜ், சமுத்திரக்கனி, எம் சசிகுமார், வரிசையில் இணைந்திருக்கும் இன்னொரு வெற்றி இயக்கு நர்- நாயகன்.

அவய்ங்களுக்கு ரியாக்‌ஷனே இல்லதான், ஆனால் படம் பார்ப்பவர்கள் செமயா ரியாக்க்க்ட் பண்ணுவார்கள்- அந்த அளவிற்கு சிறப்பான கதைக்களம் , யதார்த்தத்தை மீறாத திரைக்கதை. ஆனாலும், படம் முழுதும் இவய்ங்க ஒரிஜினல் –டூப்ளிகேட் என்று பாரபட்சம் பார்க்காமல் சரக்கடிக்கிறதைப்பார்த்தா பார்க்கிறவய்ங்களுக்கு குடல் வெந்துபோகிற ஃபீலிங்.

மைம் கோபியின் ஆரம்ப கால படமாக இருந்தாலும், புன்னகையுடன் விஷத்தைக் கக்கும் வில்லன் வேடத்தில் யதார்த்தமாக வந்து பாராட்டுகளைப் பெறுகிறார். மற்றவர்களுக்கு என்ன நடக்கவேண்டுமே அதுவே இவருக்கு நடந்துபோவது கொடூரமான கிளைமாக்ஸ்- இயக்குநரின் புத்திசாலித்தனமான கதைசொல்லல்.

மறுபடியும் மொதல்ல சொன்னதுதான்,இவய்ங்கள மாதிரி நாலுபேரு புறப்பட்டா இல்லை இல்லை ரெண்டுபேரு போதும் – சாதிக்கட்சி ஆரம்பிக்கலாம்னு நெனைக்கிறவய்ங்களுக்கு சம்மட்டி அடி அடிக்கும் இந்த உறியடி.