உத்தரவு மகாராஜா – விமர்சனம்


நாயகன் உதயாவுக்கு அவ்வப்போது அவரது காதுகளுக்குள் ஒரு குரல் ஒன்று, அதை செய், இதை செய், என ராஜா போல சில உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே இருக்கிறது. உதயாவும் அந்த கட்டளையை மீற முடியாமல் கிட்டத்தட்ட சைக்கோ போல நடந்துகொள்கிறார். சிறுவயதில் இருந்தே அவரை பரிசோதித்துவரும் டாக்டர் அவருக்கு வித்தியாசமான நோய் இருப்பதாக கூறுகிறார்.

உதயாவின் நண்பர்களும் கூட அதுதான் உண்மை என நம்பும் வேளையில் போலீஸ் அதிகாரி ஸ்ரீமன் உதயாவின் நடவடிக்கிகளை கண்காணிக்கிறார். அதில் உதயாவின் காதுகளுக்குள் யாரோ மைக்ரோ சிப் ஒன்றை வைத்து ஆபரேஷன் செய்து, அதன்மூலம் உத்தரவுகளை இட்டு வருவது தெரிந்து அதிர்ச்சியாகிறார்கள்.

யார் அப்படி உத்தரவு போடுவது, எதற்காக உதயாவை அப்படி ஆட்டிப்படைக்கவேண்டும், அப்படியானால் நிஜத்தில் உதயா யார் என பல கேள்விகளுக்கு வித்தியாசமான, சில திருப்பங்களுடன் கூடிய, அதேசமயம் மனதை கனக்க வைக்கின்ற விதமாக விடை சொல்கிறது மீதிப்படம்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் உதயாவை திரையில் பார்க்க முடிகிறது. கெட்டப் மன்னன் என சொல்லும் விதமாக, விதவிதமான கெட்டப்புகளில் நம்மை மிரட்டிவிடுகிறார் மிரட்டி. அவர் யார் என்கிற பின்னணி நமக்கு தெரிய வரும் காட்சி உண்மையிலேயே நமக்கு அதிர்ச்சியை தருகிறது தான்.

இடைவேளைக்குப்பின் வந்தாலும் இன்னொரு நாயகன் என சொல்லும் விதமாக பிரபுவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். சண்டை காட்சிகளிலும் அசத்தியுள்ளார். மூன்று கதாநாயகிகளில் உதயாவின் பிளாஸ்பேக்கில் மில் தொழிலாளியாக வரும் சேராவும் பிரபுவின் பிளாஸ்பேக்கில் வரும் பிரியங்காவும் பாஸ்மார்க் வாங்குகிறார்கள். அதிலும் பிரபுவுக்கும் பிரியங்காவுக்குமான அந்த பாச கெமிஸ்ட்ரி செம க்யூட் போர்ஷன்.

பாடல்களை குறைத்து படத்தின் விறுவிறுப்பை கூட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஆசிப் குரைஷி. படத்தின் ஹீரோவாக உதயா இருந்தாலும் அவரது நிஜ முகத்தை தோலுரிக்கும் காட்சியில் தைரியமும் காட்டியுள்ளார். இடைவேளைக்குப்பின் அதிலும் பிரபுவின் என்ட்ரிக்குப்பின் கதையில் விறுவிறுப்பு கூடுவது உண்மை. அந்தவகையில் வித்தியாசமான முயற்சி தான் என்றாலும், அதை கொஞ்சம் குழப்பி அடிக்காமல் சொல்லியிருந்தால் இந்த மகாராஜாவின் உத்தரவு படம் முழுக்க ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும்.