வன்முறை – விமர்சனம்


படத்தின் நாயகி அக்‌ஷதா தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் நாயகி அக்‌ஷதாவை காதலித்து ஏமாற்றி விடுகிறார் இளைஞர் ஒருவர்.

இதனால் கருவுற்ற அக்‌ஷதா, கருவை கலைக்க முடிவு செய்கிறார். கருவை கலைக்க மருத்துவர் நேகா சக்சேனாவை நாடுகிறார். ஆனால் அவரோ இங்கு கருக்கலைப்பு செய்தால் பிரச்சனையாகிவிடும் என கூறி அக்‌ஷதாவை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

கருக்கலைப்பு செய்வதற்காக சென்னை வரும் அக்‌ஷதாவை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, ஏமாற்றி கூட்டிச்செல்லும் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகின்றார். அப்போது மயக்கமடையும் அக்‌ஷதாவை, இறந்துவிட்டதாக கருதி அங்கேயே விட்டு சென்றுவிடுகின்றனர் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்.

காவல்துறை அதிகாரியான ஆர்.கே.சுரேஷ் மயக்க நிலையில் உள்ள நாயகியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளை தேடிச் செல்கிறார் ஆர்கே சுரேஷ்.

இறுதியில் ஆர்.கே.சுரேஷ் அவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இரண்டாம் பாதியில் அந்த ஆளும் நாயகன் ஆர்கே சுரேஷ் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். மிடுக்கான காவல்துறை அதிகாரியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார் ஆர்கே சுரேஷ்.
நாயகன் ஆர்.கே.சுரேஷ்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தை கண்டறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் படத்தின் வேகத்தை கூட்டுகிறது.

நாயகி அக்‌ஷதா ஸ்ரீதர் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். ரசிகர்களை கண்கலங்க வைக்கிறார்.

மருத்துவராக வரும் நேகா சாக்சேனாவும், தாயாக வரும் சர்மிளாவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆட்டோ டிரைவராக வரும் வினோத் கிருஷ்ணன் கொடூர வில்லனாக மிரட்டுகிறார்

பொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் எடுத்துள்ளார் இயக்குனர் மஞ்சித் திவாகர். அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்துள்ள இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்திற்கு இசை அமைத்துள்ள சன்னி விஸ்வநாத்தின் பின்னணி இசை வலுசேர்க்கிறது.

மொத்தத்தில் ‘வன்முறை’ பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை அலசுகிறது.