வந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்


வெளிநாட்டில் பெரிய தொழிலதிபராக இருக்கும் நாசரின் பேரன் சிம்பு.. பல வருடங்களுக்கு முன் தனது மகள் ரம்யா கிருஷ்ணன் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரை வீட்டைவிட்டு துரத்தும் நாசர், வயதான நிலையில் தன் மகளை பார்க்க விரும்புகிறார் அந்த பொறுப்பை பேரன் சிம்புவிடம் ஒப்படைக்கிறார்

தமிழ்நாட்டுக்கு வரும் சிம்பு ரம்யா கிருஷ்ணன் வீட்டில், தான் யார் என சொல்லாமல் ஒரு கார் டிரைவராக வேலைக்கு சேர்கிறார். ஒன்று இரண்டு பிரச்சனைகளை சரிப்படுத்துவதன் மூலம் குடும்பத்தில் நல்ல பெயரை பெறுகிறார். அதேசமயம் ரம்யா கிருஷ்ணனின் மூத்த மகள் கேத்ரின் தெரசா திருமண பிரச்சனையில் தெரியாமல் தலையிட்டு சிக்கலை உருவாக்குகிறார் சிம்பு.

அதை சமாளிக்க ரம்யா கிருஷ்ணன் தனது இளைய மகள் மமேகா ஆகாஷின் திருமணத்தை கேடயமாக பயன்படுத்துகிறார். ஆனால் மேகாவோ சிம்புவுடன் காதலில் விழுகிறார். அத்தையை தனது குடும்பத்துடன் ஒன்று சேர்க்க வந்த சிம்பு, அவரது மகளை இழுத்துக்கொண்டு ஓடுவதன் மூலம் தனது அத்தை செய்த அதே தவறை செய்யும் சூழலுக்கு ஆளாகிறார். இறுதியில் என்ன ஆனது பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா..? இல்லை பிரிவு இன்னும் அதிகமானதா என்பது கிளைமாக்ஸ்.

சுந்தர்சி படங்களைப் பொறுத்தவரை அதிரடி ஹீரோவாக இருந்தாலும் சரி, இல்லை அழுமூஞ்சி ஹீரோவாக இருந்தாலும் சரி தன்னுடைய கதைக்கேற்றபடி கலகலப்பான ஹீரோவாக மாற்றிவிடுவார். சிம்பு விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது. இதுவரை பார்க்காத சிம்புவின் ஒரு புதிய முகத்தை இதில் பார்க்க முடிவது ஆச்சரியம்தான்.

அதேசமயம் சிம்புவின் வழக்கமான பில்டப் காட்சிகளுக்கும் பஞ்ச் டயலாக்குகளுக்கும் கூட இதில் எந்த குறையும் வராமல் பார்த்துக் கொண்டுள்ளார் சுந்தர்.சி.. கலகலப்பாக கம்பு செலுத்தினாலும் கிளைமாக்ஸில் அந்த ஐந்து நிமிடம் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார் சிம்பு. இதுவும் சிம்புவின் இன்னொரு முகம்

நாயகிகள் கேத்ரின் தெரசா மற்றும் மேகா ஆகாஷ்.. இதில் கேத்ரின் மஹத்திற்கு ஜோடியாக மாறி,, பின்னால் கிடைக்கும் பலாக்காயை விட இப்போது கிடைக்கும் கலாக்காயே மேலென ஒதுங்கிவிட அதிகப்படியான வாய்ப்பு மேகா ஆகாஷுக்கு செல்கிறது. அவரும் ரசிகர்களை கவரும்படியாக தனது பங்களிப்பை கவர்ச்சிகரமாக கொடுத்துள்ளார்

ரோபோ சங்கர், விடிவி கணேஷ் யோகி பாபு மற்றும் மொட்ட ராஜேந்திரன் என நான்கு காமெடியன்கள். இதில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தி இருக்கிறார் சுந்தர்.சி அவரது மற்ற படங்களை ஒப்பிடும்போது இதில் காமெடி ஒரு மாற்று குறைவுதான் என்றாலும் அந்த குறை தெரியாத வண்ணம் அழகாக காட்சிகளை பின்னி இருக்கிறார்.

ரோபோ சங்கருக்கு படம் முழுவதும் நல்ல வாய்ப்பு அதில் பாதியை நன்றாகவே உபயோகப்படுத்தி இருக்கிறார். விடிவி கணேஷ் சிம்புவுக்கு ஜாடிக்கேத்த மூடியாக செட் ஆகி இருக்கிறார். சிம்புவை கலாய்க்க முயற்சி செய்யும் யோகிபாபுவின் காமெடியும் அதற்காக சில நேரங்களில் அவர் பல்பு வாங்குவதும் ரசிக்கும்படியாக இருக்கிறது. அவர் நாடகம் அரங்கேற்றம் செய்யும் காட்சி மட்டும் ஒரு திருஷ்டி பொட்டு

இதிலும் கெத்து குறையாத ரம்யாகிருஷ்ணனை பார்க்க முடிகிறது.. பிரபு, நாசர், சுமன், ராதாரவி, மொட்ட ராஜேந்திரன் என மற்ற நட்சத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள் சுந்தர்.சி ஆஸ்தான நடிகர்களில் எல்லோருக்கும் இதில் வந்துபோகும் வாய்ப்பு வழக்கம் போல வழங்கப்பட்டுள்ளது

ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் இரண்டு பாடல்கள் துள்ளல் ரகம். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் காட்சிகளை கண்களில் அப்புகிறது

தெலுங்கில் வெற்றிபெற்ற ஒரு படத்தின் ரீமேக் என்றாலும் தமிழுக்கு ஏற்றபடி கலகலப்பாக மாற்றியுள்ளார் சுந்தர்.சி அதேசமயம் அவரது முந்தைய படம் ஒன்றின் சாயல் கூட, இதில் தெரிவதையும் பார்க்க முடிகிறது

தனது இளைய மகள் மேகா ஆகாஷிடம் வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்ய சம்மதம் கேட்கும்போது அவர் சரியான மகிழ்ச்சியாக தலையசைத்துவிட்டு, அதன்பின் சிம்பு பக்கம் திரும்புவது கிளைமாக்ஸ் காட்சிக்கு என்றே திணிக்கப்பட்டது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது..

ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லப்பட்ட விஷயம் அதை சமன் செய்து விடுகிறது. மொத்தத்தில் காமெடி 75% சென்டிமென்ட் 25% என கலந்துகட்டி ஒரு கலகலப்பான விருந்து பரிமாறியுள்ளார் சுந்தர்.சி