விருத்தாசலம் – விமர்சனம்

அத்தை மகளை கீழே தள்ளிவிட்டான் என்பதற்காக இன்னொருவனின் கையை வெட்டுகிறார் இளம் வயதில் இருக்கும் ஹீரோ விருதகிரி. பதிலுக்கு விருதகரியின் கைக்கு குறிவைக்க, குறிதப்பி அத்தை மகளின் சகோதரனை உயிர்ப்பலி வாங்குகிறது.. இரண்டுபேருமே சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின் சில வருடங்கள் கழித்து ஊர் திரும்புகிறார்கள்..

விருதகிரி அந்த ஊரைவிட்டு போன தனது அத்தைமகளை தேட, அவரால் கை துண்டான வில்லன் சம்பத் ராம் விருதகிரியை போட்டுத்தள்ள நேரம் பார்க்கிறார்.. இந்த நேரத்தில் விருதகிரிக்கு இன்னும் இரண்டு பெண்களிடமிருந்து காதல் ஆபர் வர, விருதகிரி என்ன முடிவெடுத்தார்.. சம்பத்ராம் என்ன செய்தார் என்பது க்ளைமாக்ஸ்.

ராஜ்கிரண் பாணியில் ஒரு யதார்த்தமான கதைக்களத்தில் நடித்துவிட்டாலே மக்கள் மனதில் ஹீரோவாக இடம்பிடித்துவிடலாம் என கணக்கு போட்டு யதார்த்தமாக நடிக்க முயன்றிருக்கிறார் விருதகிரி.. ஆனால் முறையான பயிற்சி இல்லாமல் தடுமாறி இருக்கிறார்.

ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா என்று படத்தில் மூன்று ஹீரோயின்கள். மூவரும் வெவ்வேறு ரகமாக இருக்கிறார்கள். இதில் நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. முழு நேர வில்லனாக பதவி உயர்வு பெற்றிருக்கும் சம்பத்ராம் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும், தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் உருவான கதையம்சமான, அத்தை பெண்ணை காதலிக்கும் ஹீரோ என்கிற கான்செப்ட்டை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரத்தன் கணபதி. தான் சொல்லவந்ததை நேர்த்தியாக சொல்ல முயற்சித்தாலும், கதை சில இடங்களில் மேற்கொண்டு நகராமல் நொண்டியடிக்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் படம் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும்.