விவேகம் – விமர்சனம்


முதலில் கிராமம், அடுத்து மும்பை நகரம், இப்போ பாரின் சிட்டி என அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவரும் அஜித்-இயக்குனர் சிவாவின் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் தான் விவேகம்..

இன்டர்நேஷனல் சீக்ரென்ட் ஏஜென்ட் அஜித்..விவேக் ஓபராய் உள்ளிட்ட சக ஏஜென்ட்டுகளுடன் பல அதிரடி ஆபரேஷன்களில் இறங்குகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ய உதவிய ஹேக்கரான அக்சராவை நூறு நாடுகளுக்கு மேல் வலைவீசி தேட, தனது சாமர்த்தியத்தால் அவரை தனது வலையில் சிக்க வைக்கிறார் அஜித்..

ஆனால் இந்தமுயற்சியில் எதிரிகளால் அக்சரா கொல்லப்பட, அவரிடம் மீதமுள்ள இரண்டு ஆயுத சப்ளைக்கான ஆதாரங்கள் இருக்க அவற்றை கைப்பற்றுகிறார் அஜித்.. ஆனால் அவரிடமிருந்து அந்த ஆதாரங்களை கைப்பற்றிக்கொண்டு அஜித்தையே காலிபண்ணும் முயற்சியில் இறங்குகின்றனர் விவேக் ஓபராய் மற்றும் குழுவினர்.

இவர்களது தாக்குதலில் உயிர்பிழைத்து மீண்டு(ம்) தங்களை பழிதீர்க்க வரும் அஜித்தை ஆயுத பரிமாற்றம் செய்த குற்றவாளியாக சேர்க்கின்றனர்.. இப்போது அதிகார வர்க்கம் அஜித்தை வேட்டையாட துடிக்க, இந்த சதுரங்க ஆட்டத்தில் எப்படி அஜித் எதிரிகளை நிர்மூலமாக்குகிறார் என்பதுதான் மீதிக்கதை..

அதிரடி சாகசங்கள் நிறைந்த படம் என்பார்களே அதற்கு பொருத்தமான படம் தான்… ஆனால் கதை ஹாலிவுட், இல்லையில்லை பல தமிழ்ப்படங்களிலேயே பார்த்து சலித்த ‘துரோக’ கதை தான். படத்தை பார்க்கும் அஜித் ரசிகர்கள் கைதட்டி விசிலடிப்பர்கள்.. ஆனால் அதில் சாதாரண ரசிகர்கள் பல இடங்களில் அவ்வப்போது ஒன்றும் புரியாமல தேமே என அமர்ந்திருக்க வேண்டியது தான்.. அந்தளவுக்கு காட்சிகள் அனைத்திலும் ஹைடெக் தனம்..

டெக்னிக்கலாக அசத்துவது நல்ல முயற்சி தான்.. ஆனால் பல காட்சிகளில் லாஜிக் என்றால் என்ன என கேட்க வைக்கிறார்கள்.. வீரம் பட ரயில்வே ட்ராக் சண்டைக்காட்சி, வேதாளம் பட லிப்ட் சண்டைக்காட்சி போல இதையும் உச் கொட்டிவிட்டு கடக்க வேண்டியதுதான்.

ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால்விடும் வகையில் அஜித்தை பொறுத்தவரை எந்த இடத்திலும் குறைசொல்ல முடியாத கடின உழைப்பு.. ஆக்சன் காட்சிகளில் அசர வைக்கிறார். ஆனால் படத்துக்குப்படம் ஒரே சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இன்னும் எத்தனை படத்தில் இவரை பார்க்கவேண்டுமோ தெரியவில்லையே..?

வில்லனாக ஒரு பாலிவுட் முகம் வேண்டும் என்பதற்காகவே விவேக் ஓபராயை இறக்கியுள்ளார்கள். அவரும் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார். அஜித்துக்கும் அவருக்குமான ஆடுபுலி ஆட்டம் விறுவிறுப்பை கூட்டுகிறது என்கிற உண்மையையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..

கமல் மகள், தமிழில் முதல் அறிமுகம் என்கிற பில்டப்புடன் என்ட்ரி கொடுத்துள்ள அக்சரா கால் மணி நேரமே வந்து போகிறார். காஜல் அகர்வால் பழமையான அதேசமயம் கணவனுக்கேற்ற தைரியசாலி மனைவியாக அசத்துகிறார். சொல்லப்போனால் ஜாடிக்கேத்த மூடியாக செட்டாகிறார். அவர் பேசும் வசனங்களைத்தான் தாங்க முடியவில்லை..

அனிருத்தின் இசை முந்தைய அஜித் படத்தில் போல இதில் ஏதும் மேஜிக் நிகழ்த்தவில்லை.. பின்னணி இசையில் சற்றே கவனம் ஈர்க்கிறது. வெற்றி ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். ஹாலிவுட் படம் என்றே அடித்து சொல்லும் அளவுக்கு கேமராவில் விளையாடியுள்ளார்.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. சாதாரண பொது ரசிகர்களுக்கு ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’..