யார் இவன் – விமர்சனம்


கோடீஸ்வரர் பிரபுவின் மகள் ஈஷா குப்தா.. கபடி வீரரான சச்சினை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஈஷா.. ஆனால் திருமணம் செய்து கோவாவுக்கு தேனிலவுக்கு சென்ற மறுநாளே தனது மனைவியை கொன்றதாக போலீஸாரால் கைது செய்யப்படுகிறார் சச்சின். ஆனாலும் ஈஷாவின் உடல் கிடைக்காத நிலையில், சச்சினின் மாமனார் பிரபு கொடுத்த பிரஷர் காரணமாக இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு என்கவுன்டர் அதிகாரி கிஷோரிடம் கொடுக்கப்படுகிறது.

அதேசமயம் கோவா சிறையில் இருக்கும் ஜெயில் அதிகாரி, தனது தம்பியை கொன்றார் என்கிற சச்சின் மீதுள்ள முன்பகை காரணமாக அவரை சிறையிலேயே போட்டுத்தள்ள முயற்சிக்கிறார். சச்சின் தனது காதல் மனைவியை கொல்ல காரணம் என்ன..? ஜெயில் அதிகாரி சச்சினை போட்டுத்தள்ள துடிப்பது ஏன்..? கிஷோரின் விசாரணையில் இந்த கொலைக்கான முடிச்சு அவிழ்ந்ததா..? இத்தனை கேள்விகளுக்கும் பரபரப்பான விடை படத்தில் இருக்கிறது.

அறிமுக ஹீரோவை இவ்வளவு பில்டப்புகளுடன் காட்டியது சமீபத்தில் இந்தப்படமாகத்தான் இருக்கும். பாலிவுட் நடிகரின் தோற்றத்தில் படம் முழுதும் கெத்தாக வலம்வருகிறார் சச்சின்.. படம் முழுதும் முகத்தில் பெரிதாக உணர்ச்சியை காட்டாமல் நடித்திருப்பது ஒரு குறைதான் என்றாலும், கதையோட்டத்தில் அது பெரிதாக தெரியவில்லை.. கபடி விளையாட்டிலும் சண்டைக்காட்சிகளிலும் ஓரளவு பளிச்சிடுகிறார்.

நாயகி ஈஷா குப்தா மாடல் அழகிபோல உலாவந்தாலும் அவரது தோழியாக வரும் தன்யா பாலகிருஷ்ணன் தான் நம் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறார். பிரபுவிடம் ஒருநாள் மட்டும் கால்ஷீட் வாங்கி படமாக்கியதுபோல ஒரே பில்டிங்கில் வைத்தே அவரது காட்சிகளை படமாக்கியுள்ளார்கள்.. அவரது கேரக்டரில் வைத்துள்ள ட்விஸ்ட்டை யூகிப்பது சிரமம் தான்.

ரப் அன்ட் டப் அதிகாரியாக வரும் கிஷோர், முரட்டுத்தனமான ஜெயிலர் அதிகாரி, சச்சினுக்கு ஆதரவான டெல்லிகணேஷ், மனநல டாக்டராக வரும் பிரதாப் போத்தன் என பலரும் பொருத்தமான தேர்வாகவே தெரிகிறார்கள். சதீஷின் காமெடி தான் நம்மை சோதிக்கிறது. .

ஆரம்பத்தில் ஒரு கொலை, அதை கதாநாயகன் ஏன் செய்தார் என ஆவலை தூண்டிவிட்டு விட்டு, அதற்காக பல காட்சிகளை திசைமாற்றி நகர்த்தி நம்மை குழப்பவும் செய்கிறார்கள். கபடி காட்சிகளையும் ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் விறுவிறுப்பாகவே படமாக்கியிருக்கிறார்கள்..

படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக அடுக்குகிறார்கள்.. அதேசமயம் திரைக்கதையில் நிலவும் குழப்பங்களை கொஞ்சம் சரி செய்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். குறிப்பாக தெலுங்கு ரசிகர்களையும் மனதில் கொண்டு காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் சத்யா. யுந்தாலும் பெரிய அளவில் அலுப்புத்தட்டாமல் யார் இவன் என கேட்க வைக்கிறார்கள்..