எமன் – விமர்சனம்

‘நான்’ எனும் திரைப்படத்தின் மூலம் ‘விஜய் ஆண்டனி’ எனும் இசை அமைப்பாளரை நடிகராக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் ஜீவா சங்கர். அவரும் அந்த திரைப் படத்தின் மூலமாகவே ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராகவும் அறிமுகமானவர்.

இந்த இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் அரசியல் திரில்லர் படமே இந்த ‘எமன்’.

பிறக்கும் போதே தாய் தந்தை(விஜய் ஆண்டனி)யை அரசியல் மற்றும் ஜாதி சண்டைகளால் இழந்து தன் தாத்தாவான சங்கிலி முருகனுடன் வளர்ந்து வருகிறார் ஜூனியர் விஜய் ஆண்டனி.

தன் தாத்தாவின் மருத்துவ செலவிற்கு பெரும் பணம் தேவைப்பட அதற்காக தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு போகிறார் விஜய் ஆண்டனி. அங்கு அவருக்கு மாரிமுத்து மூலம் சில அரசியல் தொடர்புகள் ஏற்பட, மாரிமுத்துவுடன் நெருங்கும் விஜய் ஆண்டனியை அவரின் அரசியல் எதிரிகள் போட்டு தள்ள முயல்கிறார்கள்.

அங்கு தொடங்கும் அரசியல் பயணம், இவரின் எதிரியை அவர் போட்டுத்தள்ளுவதும் அவரின் எதிரியை இவர் போட்டு தள்ளுவதும் என படம் முழுக்க தற்போதுள்ள அரசியலையும் சூழ்ச்சிகளையும் திரில்லிங்காக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு பலமே விஜய் அண்டனிதான். படத்தில் தான் என்ன செய்ய போகிறோம் என்பதை யாரும் எளிதில் கணிக்க முடியாதவாறு படம் முழுக்க பயம் காட்டுகிறார். ஜெயிலில் நடக்கும் அந்த சண்டை காட்சி செம! மியா ஜார்ஜ்-ம் தனக்கான வேலையை செய்திருக்கிறார்.

தியாகராஜன் அவர்களுக்கு இந்த படம் ரி-என்ட்ரி என்றே சொல்லலாம். இந்த படத்திற்கு பிறகு அவர் ஒரு ரவுண்டு வருவார்.சார்லி, சாமிநாதன் இன்னும் பிற முக்கிய கேரக்டர் தேர்வுகளும் படத்திற்கு பலமே!

படத்திற்கு இசையும் விஜய் அண்டனியே. எப்பவும் போல் படத்தை இசையாலேயே மிரட்டியிருக்கிறார். பாடல்களில் ‘என் மேல கை வச்சா காலி’ மற்றும் மியாவின் அறிமுக பாடல் பக்கா!.

‘அரசியல்ல எதிர்ல இருக்கிறவன விட பக்கத்துல இருக்கிறவன்கிட்டத்தான் பாத்து இருக்கணும்’ போன்ற பளிச்சிடும் வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமே.

மொத்தத்தில் இந்த எமன் நம் உயிரை குடிக்காமல் நாம் ரசிக்கும் வகையில் நமக்கு அரசியல் சதுரங்கத்தை நிகழ்த்தி காட்டிய நல்ல படமே!

Rating: 3.5/5