அண்மையில் வெளியாகியுள்ள ‘தலக்கோணம்’ படத்தில் கதை நிகழும் காடும் காடு சார்ந்த இடமும் பாராட்டப் படுவது போல் படத்திற்கான இசையும் குறிப்பிட்டுப் பாராட்டும்படி இருந்தது.
சுபாஷ் ஐவஹர் இரட்டையர் இசையில் பாடல்களும் பின்னணிஇசையும் ‘சபாஷ் ஐவஹர்!’ என்று கூறும்படி இருந்தது.
இந்த இருவரையும் சந்தித்த போது முதலில் ‘தலக்கோணம்’ படம் பார்த்து உடனடியாக ஒரு தெலுங்குப் படவாய்ப்பு வந்துள்ளது ‘ என்கிற ஒரு சந்தோஷ தகவலைப் பகிர்ந்து கொண்டார்கள்.
சரி இவர்களின் கதையைக் கேட்போமா?
“என் பெயர் சுபாஷ் நான் அண்ணன்.என் தம்பியின் பெயர் ஐவஹர். எங்களை படிக்க பள்ளிக் கூடம் அனுப்புவதை விட இசை கற்றுக் கொள்ள அனுப்பவதில்தான் அப்பாவுக்கு ஆர்வம். அப்படியே நாங்களும் போனோம். ” இது சுபாஷ்.
”நான் ஐவஹர். இருவரில் நான் .தம்பி.அப்பா இசை கற்க ஊக்க மூட்டினாலும் படிப்பையும் நாங்கள் விட வில்லை. நான் பிஎஸ்ஸி பிசிக்ஸ் முடித்தேன். தம்பி பி.இ முடித்தார். சிறுவயது முதலே கர்நாடக சங்கீதம் கீபோர்டு. பியானோ என்று மாறிமாறி வகுப்புகளுக்குப் போய்க் கொண்டிருப்போம். ” இது ஐவஹர்.
“எங்கள் குடும்பம் ஒற்றுமையானது. அண்ணன்.தம்பி எங்களுக்குள் நான்கு வயதுதான் வித்தியாசம்.இருந்தாலும் நாங்கள் நல்ல நண்பர்கள்.எங்களுக்குள் சண்டை சச்சரவு எல்லாம் இருக்காது. நான் பேசுகிற அளவுக்கு அண்ணன் அதிகம் பேசமாட்டார் ” என்கிறார் ஜவஹர்.
தேசப்பற்று மிக்க தந்தை திருமலை சிவம் ,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு நினைவாகவே இப்படி தேசத்தலைவர்கள் பெயரை வைத்தாராம். ஜவஹரது அக்கா பெயர் இந்திராவாம்.
சினிமாவுக்கு இசையமைக்கும் முன்பு நிறைய ஜிங்கிள்ஸ் அதாவது விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளனர். மெடிமிக்ஸ் முதல் காளிமார்க் வரை சிறிய பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளனர்.பல இசையமைப்பாளர்களிடம் கீபோர்டும் வாசித்துள்ளார்கள்.
எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, சங்கர்கணேஷ் போன்ற அனுபவசாலி இசையமைப்பாளர்களிடம் மட்டுமல்ல யுவன் சங்கர்ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற இளைய இசையமைப்பாளர்களிடமும் கீபோர்டு வாசிப்பு பின்னணி இசைக் கோர்ப்பில் வாசிப்பு என சுபாஷ் ஐவஹர்
பங்களிப்பு செய்துள்ளனர்.
‘சுபாஷ் ஜவஹர் ஆர்க்கெஸ்ட்ரா’ மூலம் இந்தியா தாண்டி வெளிநாடுகளுக்கும் போய் மேடைக் கச்சேரிகளும் செய்து வந்திருக்கின்றனர்.
இவர்கள் இசையமைத்த முதல்படம் ‘பூவே பெண் பூவே’ இஷாக் ஹுசைனி நடித்த படம். அடுத்த படம் ‘என்னவோ பிடிச்சிருக்கு’ இரண்டுமே வெளியானாலும் இவர்களுக்கு பெரிதாக பெயர் வரவில்லை.
“காரணம் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கவில்லை. இடையில் லோகிததாஸின் ‘மீண்டும் மீண்டும்’ படம் இசையமைத்தோம்.
அது இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படம். கதையே வித்துவான் சம்பந்தப் பட்ட கதைதான். படமும் வெற்றி. நம்பிக்கை வந்தது.நல்ல பெயரும் கிடைத்தது. ‘தலக்கோணம்’ சொந்தப் படத்தில் இறங்கியதால் மலையாளத்தில் அடுத்து வந்த வாய்ப்பையும் செய்ய முடியவில்லை.
அப்பா எழுதி இசையமைத்து நிறைய பக்திப்பாடல்கள் கேசட்டுகள் வெளியாகி உள்ளன.அப்பாவும் நீண்டநாள் இசை, பாடல் என்று மூழ்கியவர்.எனவே நாமே ஒரு படம் எடுத்தால் என்ன என்று யோசித்தார். அப்படி உருவான படம்தான் ‘தலக்கோணம்’ சமுத்திர கனியின் உதவியாளர் பத்மராஜ் கதை சொன்னார்.பிடித்தது.இப்படத்தின் கதை காட்டில் நடக்கும்.எனவே பின்னணி இசைக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. பாடல்களுக்கும் இடம் இருந்தது. எனவே அதை தயாரிப்பது என்று முடிவு எடுத்தார் அப்பா “என்கிறார் ஜவஹர்.
தொடர்ந்து பேசிய சுபாஷ் , “படம் பார்த்து பலரும் சொன்ன கருத்து இது பெரிய நட்சத்திரங்கள் நடித்ததிருக்க வேண்டிய படம். அப்படி நடித்திருந்தால் இதன் தன்மையே வேறு. இசை நன்றாக இருக்கிறது என்றே பலரும் கூறினார்கள்.
குறிப்பாக இயக்குநர்கள் சுசீந்திரன், பேரரசு, எஸ். எஸ். ஸ்டான்லி எங்கள் இசையைப் பாராட்டியது மறக்க முடியாது. நம்பிக்கை வெளிச்சம் வந்த உணர்வு ஏற்பட்டது. அது மட்டுமல்ல படம் வந்தவுடன் அதைப் பார்த்து தெலுங்கில் இசையமைக்கும் வாய்ப்பும் வந்துள்ளது.
‘தலக்கோணம்’ படத்தை தெலுங்கில் எடுக்க ஒரு தயாரிப்பாளர் வந்திருக்கிறார். இது மேலும் ஊக்கம் தருகிறது.”என்கிறார்
பிரபல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்த போது இசையில் கற்றவை? அனுபவத்தில்.பெற்றவை ?
” எம்.எஸ்.வி அவர்கள் ஒரு ஜீனியஸ். அவர் ஹார் மோனியம் வாசிக்கும் விதமே தனி. அவர் எங்கள் குரு. இன்னொரு மேதை இசைஞானி. அவரது மெலடி எங்களைப் பெரிதும் கவர்ந்த ஒன்று இசைக் குறிப்புகளை பேப்பரில் எழுதாமல் மனதிலேயே அவ்வளவையும் வைத்திருப்பார். இது பிரமிப்பூட்டும். அவரது பின்னணி இசைப் பணியில் இதை நேரில் பார்த்து மிரண்டோம். யுவன் அனைவருடனும் நட்புடன் பழகுவார். தற்காலத்துக்கு ஏற்றமாதிரி இசை தருவார். அவர் கொடுத்த ஊக்கத்தில்தான் நாங்கள். இசையமைக்கவே தைரியம் பெற்றோம். ஸ்ரீகாந்த் தேவாவும் நாட்டுப்புற மெட்டுகளில் அலாதி ஆர்வம் காட்டுபவர். அவர் புதியவர்களைப் பாராட்டி உற்சாகப் படுத்துபவர்.” என்கிறார்கள் இருவரும்.
எந்த இயக்குநருக்கும் எப்படிப்பட்ட இசையும் தங்களால் தரமுடியும் என்கிற இவர்கள் தமது துறையில் உயரம் தொட ஈடுபாடும் தேடலும் கொண்டு உழைத்து வருகிறார்கள். இவர்களது இலக்கின் பின்னணியில் இருப்பது பணம் சம்பாதிக்கும் முயற்சியும் ஆர்வமும் மட்டுமா? ஒரு தந்தையின் கனவும்தான். அது உணர்வு பூர்வமாக இவர்களுக்குள் கலந்து இருப்பதால் வெற்றி இவர்களுக்கு வெகுதூரமில்லை.
‘மீண்டும் மீண்டும்’ இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படம். கதையே வித்துவான் சம்பந்தப் பட்ட கதைதான். படமும் வெற்றி. நல்ல பெயரும் கிடைத்தது. ‘தலக்கோணம்’ சொந்தப் படத்தில் இறங்கியதால் மலையாளத்தில் அடுத்து வந்த வாய்ப்பையும் செய்ய முடியவில்லை.
அப்பா எழுதி இசையமைத்து நிறைய பக்திப்பாடல்கள் கேசட்டுகள் வெளியாகி உள்ளன.