சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் மேனேஜராக வேலைபார்ப்பவர் ஜெய். சில காரணங்களால் தனது வீட்டை விட்டு நண்பனின் அறையில் தங்கி வேலைக்குபோகும் ஜெய்யை ஒருநாள் திடீரென சப்வேயில் எதிர்ப்படும் ஆண்ட்ரியா வழிமறித்து, லவ் பண்ணுவதாக சொல்லிவிட்டு காணாமல் போகிறார்.
முதலில் அவர் சொன்னதை அலட்சியப்படுத்துகிறார் ஜெய். ஆனால் போகப்போக காதல் உணர்வு பெருக்கெடுக்க, நண்பன் பாலசரவணனுடன் சேர்ந்துகொண்டு ஆண்ட்ரியாவை தேடுகிறார். ஒரு வழியாக ஆண்ட்ரியாவை கண்டுபிடிக்கும் ஜெய்யிடம் நான் உன்னை காதலிக்கவில்லையே என ஷாக் ட்ரீட்மென்ட் தருகிறார் ஆண்ட்ரியா.
என் இப்படி சொல்கிறார் குழம்பும் ஜெய்யிடம் தான் சொல்லும் ஒருத்தனை அடித்தால்தான் லவ் பண்ணுவேன் என நிபந்தனை விதிக்கிறார். ஆண்ட்ரியா அடிக்கச்சொன்ன நபர் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வாங்கி வந்த பாக்ஸர். அவன் யார்..? அவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் என்ன பகை..? சம்பந்தமில்லாமல் ஆண்ட்ரியா அவனை அடிக்க வேண்டும் என ஜெய்க்கு செக் வைப்பது ஏன் என்பது க்ளைமாக்ஸ்.
ஜெய் ஆக்சன் அவதாரம் எடுக்கவேண்டி, ஹேர்ஸ்டைலை மாற்றி, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் அதெல்லாம் கடைசி இருபது நிமிடங்களுக்கான உழைப்பு தான். மற்றபடி வழக்கமான டீசன்ட் ரோமியோ சட்டையைத்தான் இந்தமுறையும் ஜெய் மாட்டியிருக்கிறார்.
ஆண்ட்ரியா நல்லா நடிக்கிறார்.. அழகாகவும் இருக்கிறார்.. ஆனால் ஜெய்க்கு அக்கா மாதிரில்ல இருக்கிறார்.. இவரை எப்படிங்க ஜெய்க்கு ஜோடியா செலக்ட் பண்ணினார் சரவணன்..? தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்காக இந்த அளவு ரிஸ்க் எடுக்கும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் புதுசுதான்.
கதாநாயகன் மோதப்போவது ஒரு பாக்ஸருடன் தான் என்றால் அவர்தானே வில்லனாக இருக்கவேண்டும்.. அப்படி ஒரு மிரட்டாலான வில்லனாக வரும் ஆரன் இறுதியில் ஜெய்யிடம் அடிவாங்கும்போது பரிதாபப்பட வைக்கிறார். அழகம்பெருமாள், பாலசரவணன், அனுபமா குமார் வழக்கமான கேப் பில்லிங் கதாபாத்திரங்கள் தான்.
ஜெய், ஆண்ட்ரியாவை தேடிக்கண்டுபிடிப்பதற்குள்ளேயே இன்டர்வெல் வந்துவிடுகிறது. அப்புறம் பிளாஸ்பேக் ஒரு அரைமணி நேரம்.. இடையில் வந்து பயமுறுத்தும் ஐந்து பாடல்கள் என ஒன்றரை மணி நேரமாக பாசஞ்சராக நகரும் படம் கடைசி முப்பது நிமிடங்களில் எக்ஸ்பிரசாக மாறுகிறது…
நள்ளிரவில் மவுண்ட் ரோட்டில் ஜெய்யுடன் டீ குடித்தபடி அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் நபர் பிளாட்பார பிச்சைக்காரர் மாதிரி இருந்தாலும் அவர் சொல்லும் வார்த்தைகளும், குடித்த டீக்கு தானே காசை கொடுக்கவரும் டீசன்சியும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன..
இப்படி சின்னச்சின்ன விஷயங்களிலும், க்ளைமாக்சிலும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் இயக்குனர் சரவணன், படத்தின் ஆரம்பத்தில் இருந்தே இந்த முயற்சியை செய்திருக்கலாமே என்கிற எண்ணம் ஏற்படுவத தவிர்க்கமுடியவில்லை.
மொத்தத்தில் படம் எப்படி இருக்குன்னு கேட்டீங்கன்னா..படத்தில் ஆண்ட்ரியா சொல்லும் “சீ..சீ..சீ..போ..போ..போ” என்பதுதான் ஞாபகம் வந்து தொலைக்கிறது!