இனிப்பு என்பதை பேப்பரில் எழுதி ஒட்டித்தான் ஈக்களையும் எறும்புகளையும் வரவழைக்க வேண்டும் என்பதில்லை.. அதேபோலத்தான் கவிப்பேரரசு வைரமுத்துவும்.. அவர் செல்லும் இடமெல்லாம் அங்கு இருப்போருக்குத்தான் விளம்பரமே தவிர, விளம்பரம் வேண்டும் நிலையிலா அவர் இருக்கிறார்..?
வைரமுத்துவின் பாடல் தமது படங்களில் இடம்பெற வேண்டும் என நினைப்பவர்கள் எவ்வளவு செலவானாலும் சரி, எவ்வளவு காலமானாலும் சரி கொடுக்கவும் பொறுமை காக்கவும் தயாராக இருந்து பாடலை வாங்கிப்போகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் வைரமுத்து தனக்குத்தானே சுய விளம்பரம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது வெட்கக்கேடான விஷயம் என ஒரு பெண்மணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வேறு யாருமல்ல.. மறைந்த மாபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் மூத்த மகள் தீபலட்சுமி தான். அப்படி அவர் வைக்கும் குற்றச்சாட்டு தான் என்ன..? இதோ அவரது பேஸ்புக் பக்கத்தில் வேதனையுடன் அவர் குறிப்பிட்டுள்ள விஷயத்தை அவரது எழுத்து மூலமாகவே கேட்போம்..
“சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.
ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், ‘உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!
அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.
இப்படி போகிறது ஜெயகாந்தனின் மகள் தீப லட்சுமியின் பதிவு.. கிட்டத்தட்ட இதுவும் ஒரு குற்றச்சாட்டு தான்.. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை வைரமுத்து தான் விளக்கவேண்டும்..