லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியினை கிண்டல் செய்து விஜய் டிவியில் ஒரு காமெடி நிகழ்ச்சி நடத்தினாலும் நடத்தினார்கள். அதன்பின் “என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..”, “போலீஸைக் கூப்பிடுவேன்” என்று இணையத்தில் பலரும் கிண்டல் செய்யும் அளவிற்கு, அந்த வசனங்கள் பிரபலமானது.
சொல்லப்போனால் இப்படிப்பட்ட கிண்டலுக்குப் பிறகு அவரது நிகழ்ச்சி இன்னும் பிரபலமாகிவிட்டது என்றுகூட சொல்லலாம்.. ஆரம்பத்தில் கோபப்பட்டு பொங்கி எழுந்த லட்சுமி ராமகிருஷ்ணனே கூட பின்னர், “என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். அதுபற்றி நான் வருத்தப்பட மாட்டேன். எனக்கு மகிழ்ச்சியே” என ஜகா வாங்கிவிட்டார்.
ஆனால் இதை சாக்காக எடுத்துக்கொண்டு சினிமாவிலும் காமெடி நடிகர்கள் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பாப்புலர் வசனத்தை பேசி கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. டார்லிங் படத்தில் ‘மொட்ட’ ராஜேந்திரன்’ இந்த டயலாக்கை பேசி அப்ளாசை அள்ளினார்.
சமீபத்தில் வெளியான காஞ்சனா படத்திலும், விஜய் டிவியில் லட்சுமி ராமகிருஷ்ணனை கிண்டல் செய்தவரை அதே கெட்டப்பிலேயே நடிக்கவைத்து மீண்டும் கிண்டலடித்தார் லாரன்ஸ்.. இப்போது வெளியாகியுள்ள வை ராஜா வை படத்தில் விவேக்கும் தன் பங்கிற்கு லட்சுமியை கலாய்த்துள்ளார்.
அதாவது கஸ்டமர் கேர் அழைப்பு ஒன்றை அட்டென்ட் பண்ணும் விவேக் எதிர் முனையில் பேசும் பெண்ணிடம் பெயரை கேட்கிறார். அந்தப்பெண் லட்சுமி ராமநாதன் என்று சொல்வதற்குள், இவராகவே முந்திக்கொண்டு, லட்சுமி ராமகிருஷ்ணன் தான் பேசுகிறார் என்கிற நினைப்பில் அவரிடமே அவர் நிகழ்ச்சியை பற்றி டீடெய்லாக பேசி கலாய்ப்பதாக காட்சியமைத்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்..
போகிறபோக்கை பார்த்தால், லட்சுமி ராமகிருஷ்ணன் குறைந்தது இன்னும் ஒரு வருஷத்துக்கு ட்ரெண்டிங்கிலேயே இருப்பார் போல..