கடந்த சில ஆண்டுகளாக தமிழ்சினிமா நடிகர் நடிகைகளை டார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது கொடுக்கிறேன் பேர்வழி என்று பட்டினி போட்டு அனுப்பும் ஒரு திருவிழா வருஷா வருஷம் நடந்து வருகிறது. சொந்த காசை போட்டு இப்படி சோதனையை வாங்கிக் கொள்ளும் வழக்கம் எவ்வளவு நாளைக்குதான் நடக்கும்? ஒரு பட்டினி இன்னொரு பட்டினியிடம் சொல்லி, அந்த பட்டினி இன்னொரு பட்டினிக்கு எச்சரிக்கை செய்து கடைசியில் டார்வே என்றாலே ‘ஆளை விடுங்க சாமீய்…’ என்று ஓடிப்போகிற அளவுக்கு உருவாகிவிட்டது நிலைமை.
இந்த முறை ரொம்ப ஜபர்தஸ்தாக விருது கமிட்டியில் தேர்வான பட லிஸ்ட்டை அறிவித்தார்கள். ‘கொஞ்சம் சிரமம் பார்க்காம டார்வேக்கு வந்துருங்களேன்’ என்று அவர்கள் கேட்டுக் கொள்ள, அடி வயிற்றை தடவிக் கொண்டே ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று ‘எஸ்’ ஆனது நடிகர்கள் கோஷ்டி. வேறு வழியில்லாமல் டார்வேயே கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டது.
இங்கு வடபழனியில் இருக்கும் ஒரு ப்ரிவியூ தியேட்டரில் இந்த விருதுகளை சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளுக்கு கொடுத்தார்கள். அட… கொடுத்ததுதான் கொடுத்தார்கள். ஊருக்கெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து தடபுடலாக நடத்தியிருக்கலாம் அல்லவா? அதுதான் இல்லை. ஆளே இல்லாத ஆடிட்டோரியத்தில், கைத்தட்டலே இல்லாமல் நடந்த விருது விழா அநேகமாக இதுவாகதான் இருக்கும். சார்… எங்க உள்ளூர் டி.வியில ஒளிபரப்பிக்கிறோம். நீங்க பேசும்போது மைக்ல பேசுற மாதிரியே பேசுங்க என்று கையில் மைக்கை வேறு கொடுத்துவிட்டார்களாம். சவுண்டேயில்லாத மைக்ல தொண்டைக்கே கேட்காமல் பேசிவிட்டு போயிருக்கிறார்கள் சமீபத்து சினிமா மார்க்கெட்டில் ‘ஓய்வில் நில்’ பொசிஷனில் இருக்கும் நட்சத்திரங்கள்.
ஆனால் அங்கு எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்படங்களை மட்டும் பிரஸ்சுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்படியே அவற்றை டார்வேயிலும் வெளியிட்டு தாகத்தை தீர்த்துக் கொண்டது மேற்படி சிக்கன கோஷ்டி! உலகத்துல நடக்குற தில்லாலங்கடில இதுவும் ஒண்ணு போல! என்னமோ போடா மாதவா!
– R.S.Anthanan (NewTamilCinema)