விக்ரம் பிரபு-ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த படம் அரிமா நம்பி. கலைப்புலி தாணு தயாரித்த இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாசின் சிஷ்யர் ஆனந்த் ஷங்கர் இயக்கினார்.. அந்தபடத்தின் மிகப்பெரிய வெற்றி அவரை அடுத்து விக்ரமுக்கு கதைசொல்லும் அளவுக்கு கொண்டு சென்றது.
விக்ரமை சந்தித்து கதையை கூற, அது விக்ரமிற்கும் பிடித்துப்போய், உடனே ஓகே சொல்லிவிட்டதாகத்தான் இதுவரையிலான செய்தி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் முடிவவானபின், ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் ஜூனில் படம் துவங்கப்படவில்லை. காரணம் முதல் படத்தை தயாரித்த கலைப்புலி தாணுவிடம் ஆனந்த் ஷங்கர் போட்டிருந்த அக்ரிமென்ட் இப்போது சிக்கலை கொண்டுவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
‘அரிமா நம்பி’ படம் தொடர்பாக, இயக்குனருக்கும் கம்பெனிக்கும் இன்னும் சில பிரச்சனைகள் பேசி முடிக்கப்படவேண்டி இருப்பதாகவும் அதனால் அந்த இயக்குனரின் புதிய படத்திற்கு ஒப்புதல் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள் என்றும் கலைப்புலி தாணு மற்ற சங்கங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் சொல்லபடுகிறது.
கலைப்புலி தாணு, விக்ரமை வைத்து கந்தசாமி படம் தயாரித்தபோது படம் தாமதமானதற்கு விக்ரமும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அந்த பிரச்சனையா.. அல்லது உண்மையாகவே ஆனந்த் ஷங்கரின் ஒப்பந்தம் தான் இடிக்கிறதா என்பது, புது யூகங்களை கிளப்பிவிட்டுள்ளது. எது எப்படியிருந்தாலும் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் விக்ரம் படம் டேக் ஆப் ஆகுமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.