‘மாரி’ படத்திற்கு சரியான வரவேற்பு இல்லையென்பது ஒருபக்கம் இருக்க, ஆங்காங்கே எதிர்ப்பையும் கூட சம்பாதித்து வருகிறது. படத்தில் தனுஷ் வரும் காட்சிகளில் எல்லாம் சிகரெட் குடித்தபடி, புகையை ஊதித்தள்ளியபடி வருவது, அல்லது மது அருந்தும் காட்சிகளில் நடிப்பது என சமூகத்திற்கு கேடு தரும் விஷயங்கள் என சொல்லப்பட்டு வருபவைகளை ரொம்பவே அசால்ட்டாக செய்திருக்கிறார்.
இதேபோலத்தான் அவர் இதற்கு முன் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்திலும் தேவையே இல்லை என்றாலும் கூட சிகரெட்டை ஸ்டைலாக பிடித்தபடி வரும் காட்சி கடும் கண்டனத்திற்கு உள்ளானது. ‘மாரி’ படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட நிருபர் ஒருவர் இந்த புகை பிடிக்கும் காட்சிகளை சுட்டிக்காட்டி தனுஷிடம் கேள்வி எழுப்பினார்.
ஆனால் தனுஷோ, படத்தின் இயக்குனர் என்ன செய்யச்சொல்கிறாரோ அதை செய்யமுடியாது என நான் எப்படி சொல்லமுடியும்.. அது ஒரு படைப்பாளியின் உரிமையில் குறுக்கிடுவது போலாகும் என விளக்கம் சொல்லி நழுவினார். படத்தில் பணியாற்றிய மற்றவர்களும் தனுஷ் ஏதோ மிகப்பெரிய சாதனை செய்ததுபோல அவரை புகழ்ந்து தள்ளினார்கள்.
ஆனால் படம் ரிலீஸானதும் இலங்கையில் இருந்து கிடைத்தது இடி.. தனுஷின் நடிப்பிற்கென அங்கே பொதுவான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்களாலேயே தனுஷ் அடிக்கடி சிகரெட் பிடிக்கும் காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ‘மாரி’ படத்தை திரையிட கூடாது, தடைசெய்ய்யவேண்டும் எனகூறி தனுஷின் போஸ்டர் ஒன்றிற்கு செருப்புமாலை அணிவித்து, மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து தங்களது கண்டனங்களை வலுவாக பதிவு செய்துள்ளனர்.
நிஜ வாழ்க்கையில் தனக்கு சிகரெட், மது பழக்கம் இல்லை என்று சொல்கிறார் தனுஷ்.. நல்ல விஷயம் தான்.. ஆனால் இங்கே அனைவரும் கவனிப்பது சினிமா பிம்பத்தை தான். தனுஷ் முன்னணி நடிகர் என்பதாலும் குழந்தைகள் முதல் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாலும் இனி வரும் படங்களில் மது, சிகரெட் உபயோகிக்கும் காட்சிகளை தவிர்ப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதே பொதுவான ரசிகர்களின் கருத்தாக உள்ளது..