சினிமாவில் உள்ள ஒரு சிலர் மற்றவர்களின் படங்களுக்கு தடை வாங்குவதில் டாக்டரேட் பட்டம் வாங்கியவர்கள். அதாவது ஒரு படத்தின் தயாரிப்பாளரின் முந்தைய படங்களின் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் சமபந்தட்டவர்களோ அல்லது படத்தில் நடித்தவர்களோ, அல்லது டெக்னீசியன்களோ அந்தப்படத்தை தயாரித்த நிறுவனம் அவர்களுக்கு செட்டில் பண்ணவேண்டிய தொகையை கேட்டு கோர்ட்டில் தடைகேட்டு வழக்கு போடுவார்கள்.
இவர்கள் அனைவருமே படம் ரிலீஸ் தேதி அறிவித்தபின் தான் நஷ்டஈடு கேட்டு படத்திற்கு தடைவிதிக்க கோரி கோர்ட் படி ஏறுவார்கள். அதாவது ரிலீஸ் நேரத்தில் கழுத்தை இறுக்கி பிடித்தால் பணம் வந்துவிடும் என்பதுதான் காரணம்..
ஆனால் புதிதாக தயாரிப்பாளராக மாறிய, இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கூட ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படத்திற்கு இதேபோல ரிலீஸ் நேரத்தில் தடைகேட்டு அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் மீது கோர்ட்டில் வழக்கு போட்டார்.
மதயானைக்கூட்டம் படத்தை தயாரித்த ஜி.வி.பிரகாஷ், அந்தப்படத்தின் மீதான அனைத்து உரிமத்தையும் ஜே.எஸ்.கே. நிறுவனத்துக்கு வழங்கி இருந்தாராம். ஆனால் மதயானைக்கூட்டம் படம் வெளியான பின்னர், அதன் மூலம் கிடைத்த வருமானத்தின் விவரங்களை ஜி.வி.பிரகாஷுக்கு ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் தரவில்லையாம். ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை தனியார் டி.விக்கு விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 2.47 கோடி ரூபாய் குறித்தும் கணக்கு இல்லையாம்.
இப்படி ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டுதான், தற்போது ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்‘ என்ற படத்தை தயாரித்துள்ளார். எனவே, இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று ஜி.வி.பிரகாஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் நீதிபதி சில காரணங்களை சுட்டிக்காட்டி படத்தை தடைசெய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதனால் குறித்தபடி படம் நேற்று வெளியாகிவிட்டது. தனது புகார் இப்படி புஸ்ஸாகி போனதில் அப்செட்டான ஜி.வி.பிரகாஷ், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து யோசித்து வருகிறாராம்.