மறைந்த திரையிசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநதன் அவர்களுக்கு தமிழ்நாடு திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இசைஞானி இளையராஜா முன்னிலை வகிக்க இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கவிஞர் முத்துலிங்கம், பெஃப்சி தலைவர் சிவா, அகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இளையராஜா எம்.எஸ்.வி.யின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது,
”இன்றைக்கு இசைக்கலைஞர்கள் சங்கத்தில் எம்.எஸ்.வி அவர்களின் நினைவஞ்சலி நடந்து கொண்டிருக்கிர்து. இந்த சங்கம் உருவாவதற்கு முக்கிய காரணமே அண்ணன் எம்,.எஸ்.வி. அவர்கள்தான். இந்த சங்கத்தை உருவாக்க பிலிப்ஸ், மங்களமூர்த்தி, ஹென்றி டேனியல், ஃபாப்ஸ் போன்ற கலைஞர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அந்த காலத்தில் இசை என்கிற தொழில் எப்படி நடந்தது என்று இன்று உள்ள இசையமைப்பாளர்களுக்கு தெரியாது. அப்போதெல்லாம் இசைக்கலைஞர்களுக்கு குறிப்பிட்ட நேரமே இல்லை. கம்பெனி வேன் வரும் இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவராக ஏற்றிக்கொண்டு ஸ்டுடியோவிற்கு வரும். அவங்களுக்கு முன்னவே அண்ணன் வந்திருப்பார். இன்று உள்ளதைபோல் ஸ்பாட் பேமண்ட் அப்போது கிடையாது. பாட்டெல்லாம் மொத்தமாக வசித்து முடித்து விட்டு படம் வெளியாகி பல நாட்களுக்குப் பிறகு அந்த கம்பெனிக்குப்போயி இசைக்கலைஞர்கள் வரிசையில் நின்று தங்களுடைய பெயரை பதிவு செய்து டிக் அடித்தபிறகே சம்பளம் பெற்றனர். அதுவும் இடையில் உள்ள சிலர் தங்களுடைய கமிஷனை எடுத்துக்கொண்ட பிறகே கொடுப்பார்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் முழு சம்பளம் கிடைக்கும். அண்ணன் சாப்பிட மறந்து போய் உழைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அவரிடம் டியூன் வாங்குவதில் குறியாக இருந்தவர்கள் அவர் நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்று நினைத்ததில்லை. இதை அண்ணன் உண்ர்ந்திருந்தனால்தான் இந்த சங்கம் தோன்றியது. சாப்பிடக்கூட நேரமே இல்லாமல் உழைத்துக்கொண்டிருந்த இசைக்கலைஞர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தையும், அந்த இடத்திலேயே சம்பளம் கிடைக்கும் முறையை கொண்டுவருவதர்கு மூல கரணமாக இருந்தவர் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்தான்.
இதே போல் கவிஞர்களை ஊக்குவிப்பதிலும் அண்ணன் முதல் ஆளாக இருந்தார். கவிஞர்கள் பாபநாசம் சிவனும் கண்ணதாசனும் எனக்கு இரு கண்களை போன்றவர்கள் என்றவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நெற்றிக் கண்ணை போன்றவர் என்றார். இப்படி இன்று காமகோடியான்வரைக்கும் ஊக்குவித்துக்கொண்டிருந்தார்
அண்ணன் இசையமைத்த படம் பெயர் தெரியாவிட்டாலும் இன்றளவுக்கும் அவருடைய பாட்டு அந்த படத்தின் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும். ‘நான் ஆணையிட்டால்’ என்று பாட்டு ஒலித்தால் அந்த படத்தின் ஷாட்டு மறந்து போயிருக்கும், ஆனால் பாட்டு நினைவிலிருக்கும். ஒரு பாட்டு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணன் வடிவமைத்தார்.
இத்தாலி நாட்டில் பெர்டி என்ர கம்போஸர் இருந்தார் அந்த நாட்டின் தலைசிறந்த கவிஞர் இறந்து போய்விட்டார். பெர்டி நூறு தலைசிறந்த இசைக்கலைஞர்களை வைத்து அந்த கவிஞருக்கு அஞ்சலி இசை நிகழ்ச்சி நடத்தினார். அப்போது “இந்த இத்தாலி நாடு கர்வம் கொண்டிருந்த இசைக்கலைஞன் மறைந்த பிறகு இந்த நாடு எதை நினைத்து கர்வம் கொள்ளப்போகிறது.” என்றார். அதேபோல இன்றைக்கு நாமெல்லாம் கர்வம் கொள்கிற மாதிரி அண்ணன் இருந்தார். கவிஞர் எவ்வளவோ கவிதைகள் எழுதியிருக்கிறார் ஆனால் அவையெல்லாம் மக்களை போய்ச்சேர்ந்ததா. அண்ணன் எம்.எஸ்.வி. இசையமைத்தப்பிறகுதான் அது மக்களை சென்றடைந்தது. அந்த மெட்டுக்களில்தான் அண்ணன் பாவலர் வரதரஜான் கம்யூனிஷ கருத்துக்களை எழுதி பாடி வந்தார். அப்படி ஒரு முறை மதுரை ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தோம். அதே காலனியில் தன்னுடைய உறவினரை பார்க்க வந்திருந்த அண்ணன் எம்.எஸ்.வி. கச்சேரி நடக்கும் மேடைக்கு இரண்டு வீடுகள் தள்ளி தங்கியிருந்தார். இது எங்களுக்கு தெரியாது. நாங்கள் கம்யூனிஷ்டு ஆபிஸில் படுத்திருந்தபோது ஒரு ஊழியர் வந்து அண்ணன் எங்கள் பாட்டை கேட்டதாக சொன்னார். எங்களுக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்கவில்லை. சிலநாட்களில் சென்னை வந்து அண்ணனை சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வந்தோம்.
அவருடைய இசை என்னைப் போன்ற மரமண்டைகளுக்கும் வந்து சேர்ந்தது. அப்படிபட்ட எம்.எஸ்.வி. அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை என்னிடம் வைத்தால் அதை நானே செய்து விடூவேன் என்பதாலேயோ என்னவோ அதற்கு முன்கூட்டியே அந்த விஷயம் நடந்து விட்டது.
இன்று இளைஞர்களுக்கெல்லாம் ஊக்கமாக இருந்த கலாம் மறந்து விட்டார். நமது ரத்த நளங்களில் கலந்து விட்ட அண்ணன் எம்.எஸ்.வி மறைந்து விட்டார். இந்த நாட்டின் கர்வ காரணங்கள் மறைந்து விட்டார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம், அவர்களுடைய இசையும், கலாம் தந்த ஊக்கமும் வருகின்ற சமுதாயத்திற்கு ஊக்கமாக இருக்கும்.” என்று பேசினார் இசைஞானி இளையராஜா.
முன்னதாக பேசிய கவிஞர் கந்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் எம்.எஸ்வி.க்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் சென்னையில் மயிலாப்பூர் லஸ் கார்னரிலோ, கடற்கரை சந்திப்பிலோ அந்தம் சிலையை நிறுவ வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்தார் அதற்கு பதிலளிக்கும் விதமாக கங்கைஅமரன் அவர்கள் அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகவும், அந்த முயற்சிகளை தானே முன்நின்று செய்யப்போவதாகவும் அறிவித்தார். நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், எஸ்.எ.ராஜ்குமார், இமான், ஸ்ரீகாந்த்தேவா, எஸ்.எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், ஷைந்தவி மற்றும் எம்.எஸ்.வி.யின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஜி.சிவா, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோரும் பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பி.சரண், வாணிஜெயராம், ஹரிசரண், உன்னிகிருஷ்ணன், பாடகி கமலா மற்றும் கவிஞர்கள் முத்துலிங்கம், பிறைசூடன், எஸ்.வி.சுரேந்தர், எம்.எஸ்.வியின் நண்பர் கிட்டாரிஸ்ட் பிலிப்ஸ், பிரசாத், காந்தி கண்ணதாசன், முரளி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவை இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.எ.ராஜ்குமார், பொதுச் செயலாளர் எ.டொம்னிக் சேவியர் ஆகியோர் அனைவரையும் வரேவேற்று நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார்கள்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களுக்கு சிலை இசையமைப்பாளர்கள் சங்க அஞ்சலி கூட்டத்தில் முடிவு.