சின்னச்சின்னதாக செயின் திருட்டு பண்ணும் குப்பத்து இளைஞர்கள் நான்கு பேர்.. நினைத்தபோதெல்லாம் அள்ளிக்கொண்டுபோய் லாடம் கட்டும் போலீஸ்.. உடனே போய் ஜாமீனில் அள்ளிக்கொண்டு வரும் குப்பத்து தாத்தா.. அதில் ஒருவனுக்கு மட்டும் முரட்டுத்தனமான காதலி.. இவர்கள் அடிக்கும், (அடிவாங்கும்) லூட்டிதான் இடைவேளை வரையிலான சங்கதி.
லம்ப்பாக அடித்து லைப்பில் செட்டில் ஆகவேண்டும் என நினைக்கும் இவர்கள், ஒரு பெண்ணிடம் செயினை பறித்துக்கொண்டு செல்ல, அந்த செயின் லாக்கெட்டில் ‘என்னை காப்பாற்றினால் 2 கோடி கிடைக்கும்’ என ஒரு துண்டுச்சீட்டில் எழுதப்பட்டு இருக்கிறது.. எழுதியது யார், எழுதியவரை கண்டுபிடித்து காப்பாற்றினார்களா, இரண்டு கோடி கிடைத்ததா என்பது க்ளைமாக்ஸ்..
தமிழ், பிரசாத், உதயராஜ், ஹிட்லர் என நான்கு பசங்களையும் அவர்களது இஷ்டத்துக்கு புகுந்து விளையாட விட்டிருக்கிறார் இயக்குனர் இகோர்.. இதில் தாமாவாக வரும் தமிழுக்கு கதாநாயகன் அந்தஸ்து.. காதலியிடம் கொஞ்சி ரொமான்ஸ் பண்ணும் நேரத்தைவிட அவளிடம் முத்தம் வாங்கியும், சில சமயம் அடிவாங்கியும் தப்பிக்கவே இவருக்கு நேரம் சரியாக இருக்கிறது..
கங்காரு படத்திலேயே தான் நடிக்க தெரிந்த ஒரு நடிகை என்பதை நிரூபித்த ஸ்ரீ பிரியங்காவுக்கு இதில் படு துணிச்சலான கேரக்டர்.. காதலனுக்கு மிளகாய் தூள் வாயுடன் முத்தம் கொடுப்பதும், நடுராத்தியில் காதலன் வீட்டு கதவை தட்டி என்னால தூங்க முடியலடா என விரகத்தை வெளிப்படுத்துவதுமாக மிரளவைக்கிறார். அதேசமயம் காதலன் தான் திருடி வந்த பொருளை பரிசாக தந்ததும் வரும் கோபம் இருக்கிறதே.. யப்பா. பிரியங்காவுக்கு நல்ல தீனி போட்டிருக்கிறார் இகோர்.
மீதி மூன்று பையன்களுமே இயக்குனர் சொல்லிக்கொடுத்ததை ஓரளவு சரியாக செய்திருக்கிறார்கள். லூக்காவாக வரும் உதயராசுக்கு சுன்னத் செய்யும் காட்சியெல்லாம் தேவையா சார்..? வெட்டியிருக்கலாமே.. ஏரியா தா(த்)தாவாக வந்து பையன்களை ஜாமீனில் எடுக்கும் வியட்நாம் வீடு சுந்தரம் ஜாலி தாத்தா. அதேபோல திருநங்கையாக வரும் பெட்டர் பிரகாஷும் கலகலக்க வைக்கிறார்.
ஏரியா இன்ஸ்பெக்டராக வரும் மகாநதி சங்கரும் அவரது கான்ஸ்டபிளாக வருபவரும் வரும் காட்சிகள் தான் படத்தின் காமெடி ட்ராக்கே.. அதிலும் மகாநதி சங்கர் இல்லாத சிகரெட்டி குடிப்பதும், அதை கான்ஸ்டபிள் பற்றவைப்பதும், உடனே ஸ்கிரீனில் புகைபிடிப்பதற்கான எச்சரிக்கை வாசகம் போடுவதும் செம லந்து.
படத்தில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி.. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால், நிச்சயம் அந்த கிரெடிட் அறிமுக இசையமைப்பாளர் சாம் டி.ராஜூக்குத்தான் போகவேண்டும். குறிப்பாக ‘உன்னாண்ட காதல நான் சொல்லும்போது’ என்கிற பாடல் புதுவித ரொமான்ஸ் டூயட்.. கொஞ்சநாளைக்கு ஏரியா பையன்களின் காலர் டியூனாக உங்கள் காதுகளிலும் பலமுறை ஒலிக்க கூடும்.
நான்கு பையன்களையும் இலக்கில்லாமல் சுற்றவிட்டிருப்பதையும் இஷ்டத்திற்கு பெசவிட்டிருப்பதையும் இயக்குனர் இகோர் கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கலாம். படம் நெடுக வரும் இரைச்சலான வசனம் காதுகளை பதம் பார்ப்பது உண்மை. ரகசியத்தை கூடவா கத்திக்கத்தி பேசுவார்கள்..?
க்ளைமாக்ஸில் வில்லனின் மனைவிக்கு டபுள் ஆக்சன் போட்டிருப்பதெல்லாம் ரொம்பவே டூ மச். அதிலும் க்ளைமாக்ஸில் சீன வில்லன்கள் எல்லாம் வேறு வந்து… ஏன் பாஸ்..? முதல் பாதியை அசால்ட்டாக நகர்த்திய இகோர் இரண்டாம் பாதியில் இந்த நான்கு பெரும் ராணுவ ரகசியத்தை காப்பற்ற முயற்சிப்பதாக அமைத்திருந்தால் கதையும் வலுவாக இருந்திருக்கும்.. காட்சிகளில் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.. இருந்தால் என்ன..? ஸ்ரீ பிரியங்காவின் ரொமான்ஸ்க்காகவே இன்னொரு தபா பார்க்கலாம் பாஸ்…