இயக்குனர் சேரன் தான் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காததால், டிவிடிக்களாக மாற்றி வீடுவீடாக என் படத்தை கொண்டு சேர்க்கப்போகிறேன் என்றுதான் C2H என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார் அல்லவா..? தன் படம் மட்டும் அல்லாமல், தியேட்டர் கிடைக்காமல், ரிலீஸாக முடியாமல் பெட்டிக்குள் கிடக்கும் நல்ல படங்களையும் தொடர்ந்து வாராவாரம் ரிலீஸ் செய்யப்போவதாகவும் அறிவித்தார்.
திட்டத்தை அறிவித்து, பல மாதங்கள் கழித்து நீண்ட இழுபறிக்குப்பின்னர் ஒரு வழியாக தனது படத்தை C2H மூலம் டிவிடியாக மாற்றி வெளியிட்டார்.. இந்த திட்டம் வெற்றியோ, தோல்வியோ ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் C2H மூலமாக படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆனால் நம் காதுக்கு வந்த செய்தி வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது சேரன் தனது படத்தில் முடக்கிய காசை எப்படியேனும் எடுப்பதற்காக ஆரம்பித்த திட்டம் தான் இந்த C2H என்றும், இதை வெளியிடுவதற்கு முன் டீலர்களிடம் இருந்து டெபாசிட்டாக பெற்ற தொகைக்கான வட்டிக்கணக்கே பல லட்சங்களை சேரனுக்கு தந்திருக்கும் என்றும், டிவிடி விற்றதிலும் ஓரளவு கணிசமாக சேர்ந்திருக்கும் என்பதால் சேரனுக்கு போட்ட காசு கிட்டத்தட்ட வந்த மாதிரித்தான் என்கிறார்கள்.
இந்நிலையில் C2Hற்காக சேர்ந்த டெபாசிட் தொகையையும், மற்றவர்கள் தங்களது படத்தை ரிலீஸ் செய்வதற்காக சேரனிடம் கொடுத்த தொகையையும் வைத்து அடுத்ததாக இன்னொரு படத்தை ஆரம்பிக்கலாமா என்பதுதான் சேரனின் தற்போதைய திட்டமாம்.
ஆனால் இந்த விஷயம் அறிந்து C2Hல் டீலர்களாக சேர்ந்தவர்கள் தாங்கள் கட்டிய டெபாசிட் தொகையை கேட்டு சேரனை நேருக்க, இன்னொரு பக்கம் தங்களது படத்தை C2H மூலம் ரிலீஸ் பண்ண கொடுத்து, காசையும் கொடுத்து தேவுடு காத்தவர்களும் இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளனராம். ஆக C2H பிரச்சனையால் அடுத்து என்ன செய்வது என புரியாமல் திரிசங்கு நிலையில் இருக்கிறாராம் சேரன்..!