வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்து கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்கும் ஜீவன், தனது லீகல் அட்வைசரான லாயர் ரஞ்சித்தை நம்பி மோசம் போகிறார். சி.பி.ஐ அதிகாரிகளால் சிறைபிடிக்கப்படும் ஜீவன், நல்ல அதிகாரி ஒருவரின் உதவியால் விடுதலையாகி, வெளியே வந்து தனது எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இதுவரை நாம் பார்த்த பல படங்களில் மற்றவர்களை மோசடி செய்தே பழக்கப்பட்ட ஜீவன், இந்தப்படத்தில் நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாகும் கேரக்டரில் புதிதாகத்தான் தெரிகிறார்.. ஆனால் நடிப்பு அதே பழைய பாணிதான்.
ரவுடியாக இருந்தாலும் நட்புக்காக உயிரைவிடும் நந்தா, நட்புக்காக உயிரைவிட தயாராகும் சமுத்திரக்கனி, நட்பின் பேரிலேயே மோசடி அரங்கேற்றம் நடத்தும் ரஞ்சித் இவர்களில் நந்தா கேரக்டர் நம் மனதில் நிற்கிறது. சி.பி.ஐ அதிகாரியாக வரும் டி.சிவக்குமார், தோற்றத்திலும் நடிப்பிலும் மிடுக்கு.
ஜீவனின் மனைவியாக வரும் கதாநாயகி வித்யாவுக்கு களையான முகம் என்றாலும் நடிக்க வாய்ப்பு குறைவாகவே தரப்பட்டுள்ளது. தம்பிராமையாவை விட, சிங்கமுத்துவின் காமெடி தேவலாம். காமெடி என்கிற பெயரில் கோவை சரளா அடிக்கும் கூத்து சகிக்க முடியவில்லை. சமுத்திரக்கனியின் ‘பாஸ்’ காமெடியும் சுத்தமாக எடுபடவில்லை ‘பாஸ்’..
படத்தின் முதல் இருபது நிமிட காட்சிகள் வழவழா என இழுப்பதை தவிர்த்திருக்கலாம். அவ்வளவு பணம் போட்டு நிறுவனம் ஆரம்பிப்பவர், இவ்வளவு ஏமாளியாகவா இருப்பார்.? பட தயாரிப்பாளரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம் என்பதால் நம்புவோம். கட்டுமான நிறுவன மோசடியை கையில் எடுத்த இயக்குனர் சூர்ய பிரகாஷ், ஓரளவு விறுவிறுப்பாக செல்லும் கதையில் இன்னும் சில திருப்பங்களை இணைத்திருந்தால் அதிபர் கம்பீரமாக இருந்திருப்பார்.