இன்றைய தேதியில் வளர்ந்துவரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு போட்டி அல்லது எதிரிகள் என இருந்தால் அது தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி தரப்பினர் என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம். பேரன், பேத்தி எடுக்கும் வயதில் உள்ள முத்தின ஆட்களான கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனிடம் சரிக்கு சமமாக மல்லுக்கட்டி, அவரை தாக்கியது கமலின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி..
ஆனால் இந்த நிகழ்வு நடந்த சில நிமிடங்களிலேயே சிவகார்த்திகேயனுக்கு சற்று முன்னால் காரில் சென்றுகொண்டிருந்த கமலுக்கு இந்த செய்தி போய் சேர்ந்தது.. உடனே அவர் சிவகார்த்திகேயனை போனில் தொடர்பு கொண்டு வருத்தப்படவேண்டாம் என கூறினாராம். பின்னர் திருச்செந்தூர் சென்று நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டபோது கிடைத்த இடைவெளியில் கமல், சிவகார்த்திகேயனிடம் வருத்தம் தெரிவித்தாராம்.
அதுமட்டுமல்ல, சினிமாவில் இது போன்ற நிகழ்வுகள் எதிர்பாராமல் நடக்கும் என்றும் அதை பெரிதுபடுத்தி அதன் பின்னே போய்க்கொண்டிருந்தால், தேவையில்லாத வழக்கு நடைமுறைகளில் சிக்கி நம் கேரியரில் கவனம் சிதறும் என சில ஆலோசனைகளையும் கூறிய அவர் இந்த நிகழ்வு குறித்து போலீசார் விசாரிப்பார்கள்.. அப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி செய்யுங்கள் என்றும் கூறினாராம்.
கமல் அப்படி சொன்னதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம்.. அதாவது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அவரை ஏதாவது ஒரு காரணத்தை வைத்து கமல் ரசிகர்கள் என்கிற பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கவும் வாய்ப்பு உண்டு என்கிற கோணமும் இதில் இருக்கிறதாம். அதனாலேயே போலீசார் சிவகார்த்திகேயனிடம் இந்த சம்பவம் பற்றி விசாரித்தபோது சிவகார்த்திகேயனும் கமல் சொன்னதுபோல அவர்களிடம் பட்டும் படாமல் பேசி அனுப்பிவிட்டாராம்.
மதுரையில் உள்ள சிவகார்த்திகேயனின் மாமனார், தனது மருமகன் தாக்கப்பட்ட விஷயம் அறிந்ததும் கோபத்தில் பொங்கியவர், தனது செல்வாக்கை பயன்படுத்தி, உடனே அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானாராம்.. ஆனால் சிவகார்த்திகேயன், கமலிடம் இதுபற்றி பேசிவிட்டதாக கூறி அவரை சமாதானப்படுத்தி டென்ஷனை குறைத்தாராம்.