சிறுவர் மலர் புத்தகத்தில் இரண்டு பக்கத்தில் அடங்கிவிடுகிற சாமான்ய உலகத்திற்கும் வேதாள உலகத்திற்கும் நடக்கும் யுத்தம் பற்றிய காமிக்ஸ் கதைதான் இரண்டரை மணி நேர ‘புலி’யாக விஜய் ரூபத்தில் வந்திருக்கிறது.
வேதாள உலகின் ராணி ஸ்ரீதேவி.. அவரது தளபதி சுதீப்.. ராணியை கைக்குள் போட்டுக்கொண்டு, சுற்றியுள்ள கிராமங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார் சுதீப். அதில் பிரபுவின் கிராமமும் ஒன்று… அவரின் வளர்ப்பு மகன் விஜய். ஒருநாள் வேதாள உலகத்தினர் ஊருக்குள் நுழைந்து பிரபுவை கொன்றுவிட்டு விஜய் காதலிக்கும் பெண்ணான ஸ்ருதிஹாசனை கவர்ந்து செல்கின்றனர்..
கிராமத்தில் இருக்கும் ஜோ மல்லூரி கொடுக்கும் விஷேச சக்தி மருந்துடனும் நண்பர்கள் இருவருடனும் வேதாள உலகத்தை நோக்கி பயணிக்கின்றார் விஜய்.. போகும் வழியில் சித்திரக்குள்ளர்களின் நட்பு கிடைக்க அவர்களில் மூவரும் விஜய்யின் உதவிக்காக பயணத்தில் இணைந்து கொள்கின்றனர். வேதாள தேசத்தை நெருங்கும்போது, அந்த நாட்டின் இளவரசி ஹன்சிகாவை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றுகிறார் விஜய்..
இதனால் வேதாள உலகில் இவருக்கு மரியாதையான வரவேற்பு கிடைக்க, அவர்களிடம் தானும் ஒரு வேதாளம் தான் என சொல்லி நம்பவைக்கிறார்.. தளபதி சுதீப்பிற்கு சந்தேகம் ஏற்பட்டு இரண்டு மூன்று சோதனைகள் வைக்க, அதில் எல்லாம் வெற்றி பெறுகிறார் விஜய். இறுதியில் கடத்தப்பட்ட ஸ்ருதிஹாசனை பலி கொடுக்க முயற்சிக்கும் சுதீப்பின் திட்டத்தை முறியடித்து ஸ்ரீதேவியையும் அவர் பிடியில் இருந்து மீட்டு, சுபமாக முடித்து வைக்கிறார் விஜய்.
கண்களில் நீல நிறத்தை ஊற்றிக்கொண்டு வாயில் புலிப்பல்லை சொருகிக்கொண்டால் உடனே விஜய் வேதாளம் ஆகிவிடுகிறாராம்.. இதைவிட காமெடி, அவரது அப்பாவின் பிளாஸ்பேக் தான்.. சிவாஜி படத்தில் வாஜி வாஜி பாடலில் ரஜினி என்ன கெட்டப்பில் தோன்றுவாரோ, அதுதான் விஜயின் அப்பாவாக வரும் விஜய்யின் கெட்டப்.. சிலசமயம் குதிரையில் போகும்போது பின்பக்கம் இருந்து பார்த்தால் பாதி… ஸாரி.. போதி தர்மர் மாதிரியும் தெரிகிறார்.. அந்த கெட்டப்பும் பல்லை கடித்துக்கொண்டு அவர் பேசும் டயலாக்கும் சரியான காமெடி..
அதிலும் அரண்மனைக்குள் நுழைந்தபின் விஜய் பேசும் வசனங்கள் எல்லாம் அரசியல் கலந்தே வருகிறது.. உடனே வீரதீர வசனங்கள் என நினைத்துவிட வேண்டாம்.. எல்லாம் அம்மாவை குளிர்விக்கும் விதமான கூலிங் வசனங்கள் தான். ராஜாராணி காலத்து படம் என்றாலும் வசனத்தில் தடுமாற்றம் காட்டியிருக்கிறார் விஜய்..
அதுசரி.. ஒருகாட்சியில் ஸ்ருதிஹாசனை இவர் அழைத்ததும் அவர் தந்தை நரேனையும் மீறி இவருடன் வந்துவிடுகிறார்.. ஆனால் அடுத்த காட்சியில் இன்னும் என்னை நம்பலைல.. என்னை காதலிக்கிறியா இல்லையா என விஜய் கேட்கிறார்.. என்ன அபத்தம்..? நம்பாமலா. அவங்கப்பா முன்னாடியே இவருடன் கிளம்பி வந்தார்.. இந்த இடத்தில் விஜய், ஸ்ருதியை குறை சொல்லவில்லை.. கதாசிரியர் சிம்பு தேவன் கோட்டை விட்டதைத்தான் சொல்கிறோம்.
ஸ்ருதி, ஹன்சிகா இருவரும் வந்தோம் ஆடினோம், போனோம் என தங்களுக்கு கொடுத்த வேலையை திருப்தியாக நிறைவேற்றியுள்ளார்கள். விஜய்யின் வளர்ப்பு தந்தையாக ஒரு கை இல்லாத கேரக்டரில் பிரபு கச்சிதம். படத்திற்கு திருஷ்டி பொட்டு என்றால் அது ராணியாக வரும் ஸ்ரீதேவிதான்.. அரியணையில் அவர் அமர்ந்திருக்கும் காட்சிகளில் எல்லாம் மூல நோயால் பாதிக்கப்பட்டவர் போலவே அமர்ந்திருக்கிறார்.. என்ன மேனரிசமோ..? சில காட்சிகளில் குளோசப்பில் வேறு அவர் முகத்தை காட்டித்தொலைக்கிறார்கள். சில நடிகைகள் தாங்களாகவே ஒரு குறிப்பிட்ட ஸ்டேஜில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.. ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக இருந்தோம் என்பதற்காக இப்போதும் அவரை கூட்டி வந்து இம்சிக்கும் இம்சை அரசன் சிம்புதேவனின் டேஸ்ட் என்ன டேஸ்ட்டோ..?
வில்லன் தளபதியாக சுதீப்.. மகதீரா, பாகுபலி வில்லன்கள் இருவரையும் ஒன்றாக மிக்ஸ் பண்ணி, கொஞ்சம் உப்பு, காரத்தை குறைத்தால் அதுதான் அவரது கேரக்டர். ஒரு நல்ல நடிகரை இப்படியா வேஸ்ட் பண்ணுவது..? தம்பிராமையா, சத்யன், இமான் அண்ணாச்சி, ரோபோசங்கர், வித்யுராமன் என ஐந்து காமெடி நடிகர்கள் அவ்வப்போது சிரிக்கவைக்கவேண்டும் என்பதற்காக ஏதேதோ பண்ணுகிறார்கள்..
கதை நிகழும் காலமாக காட்டிய இடங்களெல்லாம் கண்ணில் ஒத்திக்கொலாலாம் போல அவ்வளவு அழகு.. ஆர்ட் டைரக்டருக்கும் கேமராமேன் நட்டிக்கும் திருஷ்டி சுத்திப்போடலாம். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துவிட்டால் பாட்டெல்லாம் ஹிட்டாகி விடும் என்கிற மாயையில் இருந்து இயக்குனர்களும் நடிகர்களும் வெளியே வரவேண்டிய தருணம் இது.
நமக்கு அதிகம் தெரியாத கதைகளான இம்சை அரசன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படங்களை உயிர்ப்புடன் கொடுத்து அந்த உலகத்துக்கே அழைத்துச்சென்று நம்மை சிரிக்க வைத்த சிம்புதேவன், இதில் வழவழ, சவசவ என கதையை நகர்த்தியிருக்கிறார்.