பயணத்தை பின்னணியாக கொண்டு ஒரு விறுவிறுப்பான படத்தை ஹாலிவுட் பாணியில் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.. ஆனால் நினைத்தபடி தர முடிந்ததா..?
பத்து எண்றதுக்குள்ள இத முடிச்சுக்காட்றேன் பாரு என சிலர் சவால் விடுவார்களே, அப்படி ஒரு ஆள் தான் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கார் ஓட்டும் ட்ரைவரான விக்ரம்.. தங்கையின் மருத்துவ செலவுக்காக அவ்வப்போது காரில் சரக்கை கைமாற்றி தந்து காசு பார்க்கிறார். அவரது திறமையால் ஈர்க்கப்பட்ட கடத்தல் கும்பல் தலைவனான பசுபதி இதுபோல சில வேலைகளை விக்ரமுக்கு தருகிறார்.
அநாதை ஆசிரம ஹாஸ்டலில் வளரும் சமந்தாவை உத்தரகாண்டில் உள்ள முசோரிக்கு கடத்தி செல்லும் வேலையை ஒப்படைக்கிறார்.. காரில் பெண் இருப்பது தெரியாமலும், அது தனக்கு ஏற்கனவே ட்ரைவிங் ஸ்கூலில் பழக்கமான சமந்தா தான் என்பதை அறியாமலும் வழக்கம்போல சரக்கு என நினைத்து கடத்தி செல்கிறார் விக்ரம்..
பாதி வழியிலேயே இது தெரியவர, எதற்காக சமந்தாவை கடத்த சொன்னார்கள் என்பதை அறிந்துகொள்ள முசோரிக்கு சென்று சமந்தாவை அவர்களிடம் ஒப்படைகிறார்.. ஆனால் அங்கேபோனதும் அங்குள்ள ஜமீன் குடும்பத்தில் சமந்தாவுக்கு ராஜமரியாதை கிடைப்பதை பார்த்து குழம்புகிறார் விக்ரம்.
ஆனால் இதன் பின்னணியில் மிகப்பெரிய சதிவலை ஒன்று பின்னப்பட்டுள்ளதை அறியும் விக்ரம் சமந்தாவுக்கு நேரவிருக்கும் வித்தியாசமான ஆபத்தை கண்டு அதிர்ச்சியடைகிறார். சமந்தாவுக்கு வந்த ஆபத்து என்ன, அந்த ஆபத்திலிருந்து சமந்தாவை விக்ரம் மீட்டாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
பத்து எண்றதுக்குள்ள சுறுசுறுப்பாக இயங்கவேண்டும் என்பதாலோ என்னவோ எப்போதுமே இழுத்துக்கட்டப்பட்ட கம்பி போல டெம்பரும் தெனாவெவேட்டுமாகவே உலாவருகிறார் விக்ரம். ஆனால் ஓவர் ஸ்மார்ட் உடம்புக்கு ஆகாது என்பதைப்போல படத்தின் முன்பாதியில் அது போரடிக்கவே செய்கிறது. ஆனால் ஆக்சன் காட்சிகளில் ‘ஐ’ என.. இல்லையில்லை அதுக்கும் மேலே நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் விக்ரம்.
அப்பாவியாக இருந்துகொண்டு, நீ பத்து எண்றதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சுடுவியா என கேட்கும் காட்சியில் அடப்பாவி என சொல்லவைக்கிறார் சமந்தா.. ஆனால் சமந்தாவை பார்க்கும்போதெல்லாம அஞ்சான் சமந்தாவுக்கும் இந்த சமந்தாவுக்கும் உள்ள ஆறு ஒற்றுமைகள் பளிச்சென தெரிகிறது.. ஆனால் க்ளைமாக்ஸில் கடைசி பத்து நிமிடம் புது சமந்தாவாக அவர் எடுத்திருக்கும் அவதாரம் நிச்சயம் பாராட்டுக்குரியதுதான்.
காமெடிக்கு ஆள் இல்லாத குறையை தாதாவாக வரும் பசுபதியை வைத்தே சமாளித்திருக்கிறார்கள்.. வடக்கத்திய வில்லன்கள் வழக்கம்போல உதார் காட்டி க்ளைமாக்ஸில் அடிவாங்கி சாகிறார்கள்.. இமானின் இசையில் இரண்டு பாடல்கள் ஆட்ட ரகம்.. இயக்குனர் விஜய் மில்டனின் வேகத்துக்கு ஈடுகொடுத்து பரபரவென பறந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.
பையா, அலெக்ஸ்பாண்டியன் இரண்டு கதையையும் ‘அஞ்சான்’ பிளேவரில் தந்தால் எப்படியிருக்குமோ அதேபோலத்தான் இடைவேளை வரை படம் நகர்கிறது. சமந்தாவுக்கு ட்ரெஸ்ஸில் கிளாமர் காட்டுவதைவிட வசனத்தில் வரம்பு மீறவைத்திருக்கிறார் இயக்குனர்.. லிங்கா க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்கு சவால் விடுகிறது அந்த ரயில் சண்டைக்காட்சி. அதேசமயம் சேசிங் காட்சிகள், உத்தரகாண்ட் பகுதியின் குளுமை, சமந்தா கதாபாத்திரத்தில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் இவையெல்லாம், அட பரவாயில்லையே என சொல்லவைக்கிறது.
மொத்தத்தில் முதல் பாதியில் பத்து எண்றதுக்குள்ள தூக்கம் வந்துவிடுகிறது.. இடைவேளைக்குப்பின் இருபது எண்றதுக்குள்ள படம் முடிந்துவிடுகிறது.