சிலர் இருக்கிறார்கள்… தனது பையன் பர்ஸ்ட் ரேங்க் வாங்கியதை தம்பட்டம் அடிக்கும் அதே வேளையில் பக்கத்து வீட்டு பையன் பெயிலானதையும் கூடவே சேர்த்து போட்டுக்கொடுப்பார்கள்.. அதில் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.. நேற்று முன் தினம் தனுஷ் செய்த விஷயமும் இதேபோல ஒரு சீப்பான விஷயமாகவே அமைந்து விட்டது.
விஷயம் இதுதான்.. ’10 எண்றதுக்குள்ள’ படத்தை வெளியிட்டிருக்கும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், தங்களது படம் முதல் நாளில் 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்தது. ஆனால் பல்வேறு சமூக வலைத்தளங்களில் ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படம் 2.92 கோடி தான் வசூல் செய்திருக்கிறது என தகவல்களை வெளியிட்டார்கள்.
இந்த நிலையில், தான் தயாரித்துள்ள ‘நானும் ரௌடி தான்’ படம் 2.16 கோடி வசூல் செய்துள்ளது என பெருமையுடன் குறிப்பிட்ட தனுஷ், போகிற போக்கில் ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படம் 2.92 கோடி தான் வசூல் செய்திருக்கிறது என்கிற விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இடம்பெறுவது போள ரீ-ட்வீட் செய்தார்.
இதுதான் தேவையில்லாத சிக்கலை உருவாக்கி விட்டது.. உடனே ’10 எண்றதுக்குள்ள’ படக்குழுவினர் தரப்பிலிருந்து “ வசூல் விவரம் குறித்து சினிமா வர்த்தகர்கள் மற்றும் திரையரங்குகளில் விசாரித்துவிட்டு கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என கொஞ்சம் காட்டமாகவே அறிவித்தார்கள்..
அந்த அறிவிப்பே தனக்குத்தான் என தெரிந்தாலும், தனுஷ் தனது ரசிகர்களுக்கு சொல்லவேண்டிய விஷயத்தை சொல்லி முடித்தபின், ஒன்றுமே தெரியாதவர் போல, “எனது எண்ணம் ‘நானும் ரவுடிதான்’ வசூலை ட்வீட் செய்வதில் தான் இருந்தது. தவறுதலாக பண்ணிவிட்டேன்” என சால்ஜாப்பு சொல்லி எஸ்கேப் ஆனார்.