கடந்த 2௦12ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படம் ‘ஷட்டர்’. தற்போது தமிழில் ‘ஒரு நாள் இரவில்’ என உருமாறி இருக்கிறது.. மலையாளத்தில் ஆடியன்சின் அப்ளாஸை அள்ளிய ஷட்டரின் கதைதான் என்ன..?
சிங்கப்பூர் ரிட்டர்னான சத்யராஜ், ஒரு மாத ஓய்வில் தான் சொந்த ஊருக்கு வறுகிறார். ஒருநாள் தனது ரெகுலர் ஆட்டோ ட்ரைவர் வருணின் ஆட்டோவில் போகும்போது திடீரென வழியில் தென்படும் விலைமாதுவான அனுமோல் மீது சபலப்பட்டு, ஆட்டோ ட்ரைவர் உதவியுடன் காலியாக உள்ள தனது கடைக்கு அழைத்து செல்கிறார்.
அவர்கள் இருவரையும் உள்ளே வைத்து வெளியே பூட்டிவிட்டு அவர்களுக்கு இரவு டிபன் வாங்கிவருவதாக செல்லும் வருண் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் வரும்போது போலீசிடம் சிக்கிக்கொள்கிறார். நேரம் ஆக ஆக பசியால் அனுமோல் கத்த ஆரம்பிக்கிறார். இப்படியே இரவு கழிய, வருண் காலையில் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தாலும் கூட பகலில் சென்று ஷட்டரை திறக்கமுடியாத சூழல்..
அனுமோலுக்கு வேண்டிய பணம் தருவதாக சொல்லி அவரது வாயை அடைத்தாலும், தனது மனைவி குழந்தைகளுக்கு தெரிந்தால் மானம் போய்விடுமே என ஒருநாள் முழுவதும் பூட்டிய அறைக்குள் சத்யராஜ் அனுபவிக்கும் பதற்றம் தான் படத்தின் மொத்தக்கதையும்.. இதற்குள் பெண் கல்வியின் அவசியம் என்கிற ஒரு செய்தியை வாழைப்பழத்தில் ஊசியாக ஏற்றியிருக்கிறார்கள்.
மலையாளத்தில் உருவான ஷட்டரை இதனுடன் ஒப்பிட்டு பார்க்காமல் பார்த்தால் இது அருமையான த்ரில்லர் படங்களின் பட்டியலில் இணையவேண்டிய படம் தான். சத்யராஜ் தலைமுறை இடைவெளியை புரிந்துகொள்ளாமல் மகளை தவறாக நினைத்து அவளுக்கு திருமண செய்யத்துடிப்பது, விலைமாதுவுடன் சல்லாபத்துக்கு ஆசைப்பட்டு அவமானத்தில் மாட்டிவிடுவோமோ என ஒருநாள் முழுவதும் பயத்தில் சிக்கி தவிப்பது என தனது கதாபாத்திரத்தின் தன்மையை சரியாக பிரதிபலித்திருக்கிறார்.
விலைமாது அனுமோல் ஏற்கனவே இரண்டு மலையாள படங்களில் விலைமாதாகவே பின்னி பெடலெடுத்தவர் தான்.. இதில் மட்டும் சொல்லவா வேண்டும். பசியால் கத்துவதும், பின்னர் சத்யராஜின் சூழல் புரிந்து அமைதியாவதும், படிப்பறிவில்லாமல் சீரழிந்த தனது சொந்தக்கதை மூலமாக போகிறபோக்கில் சத்யராஜின் கண்களை திறப்பதும் என நேர்த்தியான நடிப்பு.
ஐசரி கணேஷின் மகன் வருண் இதில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். சத்யராஜையும், அனுமோலையும் கடைக்குள் வைத்து இவர் போடும் பூட்டு தான் கதை ராக்கெட்டின் அடிப்பகுதியில் தீப்பற்ற வைக்கிறது. பீல்ட் அவுட்டான இயக்குனராக யூகி சேது.. ஆட்டோவில் ஸ்க்ரிப்ட்டை தொலைத்துவிட்டு பரிதவிப்பதும், பின்னர் ஆட்டோ ட்ரைவருடன் திகில் பயணத்தில் இணைந்துகொள்வதுமாக ஜமாய்க்கிறார்.
சத்யராஜின் மகளாக நடித்திருப்பவர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாறும் துணைப்பாத்திரங்களும் கதையோட்டத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள். பிரபுவின் ஒளிப்பதிவு இரவு நேர பதட்டத்தையும் விகாரத்தையும் நன்றாக வெளிக்காட்டியிருக்கிறது.
மற்றவர்களின் கதைக்கு கத்திரி போட்டு கச்சிதமாக திரைக்கு அனுப்பி வைக்கும் எடிட்டர் ஆண்டனி முதன்முறையாக இயக்குனர் அனுபவத்தையும் இதில் உணர்ந்திருக்கிறார்.. மலையாளத்தில் இதன் ஒரிஜினலை இயக்கிய ஜாய் மேத்யூ இந்த கதையுடனேயே பல வருடங்கள் வாழ்ந்து அதற்கான ஜீவனை திரையில் அப்படியே காட்டியிருந்தார்.
தமிழிலோ அதை ஒரு ரீமேக் என்கிற அளவில் மட்டுமே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆண்டனி. அதனால் இதில் அந்த ஜீவன் நிறையவே மிஸ்ஸிங். ஆனால் புதிதாக பார்க்க செல்பவர்களுக்கு த்ரில்லான, திகிலான அனுபவத்தை இந்தப்படம் நிச்சயம் தரும்.