ஒரு பிளாஸ்பேக்கை பார்த்து விட்டு அப்புறம் நடப்பு விஷயத்துக்கு வருவோம்.. கடந்த 2014ல் வெளியான உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு தணிக்கையில் ‘யு’ சான்றிதழும் பெற்றது. ஆனால் அந்தப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது என அப்போது கூறிவிட்டார்கள்.. இதை எதிர்த்து ஒரு படத்தயாரிப்பாளராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் உதயநிதி.
அதன்பின் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டது. உதயநிதி இப்படிப்பட்ட பிரச்சனையை சந்திப்பது அப்போது நான்காவது முறை. ஏற்கனவே அவர் தயாரித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘நீர்ப்பறவை’, ‘வணக்கம் சென்னை’ ஆகிய படங்களுக்கும் இதேபோல் கேளிக்கைவரி விலக்கு அளிக்க மறுக்கப்பட்டது.
இத்தனைக்கும் வன்முறை, ஆபாசம் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள் தன் இவையெல்லாம்.. மேலும் அனைத்து படங்களுக்கும் தமிழிலேயே பெயர் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே போன்ற பிரச்சனையில் ஐந்தாம் முறையாக சிக்கியுள்ளது உதயநிதி நடித்துள்ள ‘கெத்து’ படம்..
இந்தப்படத்திற்கும் வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. ‘கெத்து’ என்னும் வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல என தற்கு காரணம் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல விஷாலின் ‘கதகளி’ படத்துக்கும் பெயர்க்காரணம் கூறி வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் உதயநிதி ஆளுங்கட்சிக்கு எதிரானவர் என்பதும், விஷால் தற்போது ஆளுங்கட்சி சார்புடைய சிலரை எதிர்த்து நடிகர்சங்க பொறுப்புக்கு வந்ததையும் ஆளுங்கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் ரசிக்கவில்லை என்பதுதான்.