உலகமே போற்றும் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் உண்டா..? அப்படிப்பட்ட மாமேதையை பற்றிய தகவல்களுடன், அவரது பேட்டிகளுடன் மீண்டும் நாம் அவரை திரையில் பார்ப்பது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்.. ஆனால் இங்குள்ள சேனல்கள் அவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்கிற செய்தி மனதை சுளீர் என தாக்குகிறது.
“இமயத்துடன்” என்ற தலைப்பில் திரைப்பட கல்லூரி மாணவர் திரு.விஜயராஜ் என்பவர்.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவருடனே 2002-ஆம் ஆண்டு தொடங்கி 2013-ஆம் ஆண்டு வரையில் பயணித்து தொலைக்காட்சிக்காக (150-எபிசோட்)எடுத்து பக்காவாக முடித்து வைத்து விட்டார்.
இதில் அவர் பிறந்து-வாழ்ந்த-வளர்ந்த இடங்கள், 80-க்கும் மேற்பட்ட கலைஞர்களை நேரடியாக திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களே அவரவர் இருப்பிடத்திற்கே சென்று கலந்துரையாடிய நிகழ்சிப்பதிவுகள்-..அற்புதமான-அபூர்வமான பாடல் காட்சிகள், அபூர்வ தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்பின் எல்லா தொலைக்காட்சி உரிமையாளர்களைவும்-அதிகாரிகளைவும் சந்தித்து டிரைலரையும் போட்டுக்காட்டி ஒளிபரப்புவதற்கு வாய்ப்புக் கேட்டுக்கேட்டு அலைகிறார்… அலைகிறார்… அலைந்துகொண்டே இருக்கிறார் இந்த விஜயராஜ்.
தினமும் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் பாடல் காட்சிப்படங்களைப் போட்டு பணம் சம்பாதிக்கும் எல்லா தொலைக்காட்சிகளும் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடரை ஒளிபரப்புவதற்கு தயங்குகிறாகள்… .மழுப்பலான பதில்களைக்கூறி திரு.விஜயராஜ் அவர்களை அனுப்பிவிடுகிறார்கள்.
எப்படியும் ‘இமயத்துடன்’ என்ற டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடருக்கு வழி பிறக்கும் என்று தினமும் ஒவ்வொரு தொலைக்காட்சி அலுவலகங்களுக்கும் அவரும் நடையாய் நடந்துகொண்டிருக்கிறார்.. இங்கே போலியான சூப்பர் சிங்கர் போட்டிகளுக்கும், சொல்வதெல்லாம் உண்மை போன்ற கச்சடா நிகழ்ச்சிகளுக்கு தானே சேனல்கள் முன்னுரிமை கொடுக்கின்றன. பின்னே எப்படி அந்த மாமேதையின் அருமையை புரிந்துகொள்ளப் போகிறார்கள்.