மருது விமர்சனம்

விஷால் படமா அல்லது RK சுரேஷ் படமா என்கிற அளவுக்கு வில்லன் ரோலக்ஸ் பாண்டியனாக RK சுரேஷை செதுக்கியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. ஸ்ரீதிவ்யாவை காதலிப்பதாலும், நல்லவனாக இருப்பதாலுமே விஷால் தான் நாயகனாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது. தனது ஒரே மூலதனம், எவனென்றும் பார்க்காமல் கழுத்தைச் சீவிவிடுவது என்பதை மட்டுமே வைத்துக்கொண்டு அதிவேகமாக மேலே மேலே போகும் சுரேஷ் அதைவிட வேகமாக மேலேயே சென்றும் விடுகிறார்.. மிளகாயைக் கடித்துக்கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டே விஷாலைப் போட்டுத்தள்ள தயாராவது மிகவும் இயல்பான தீவிரவாதம்.

தொடை தெறியத்தூக்கிக் கட்டிய லுங்கி முண்டா பணியன் என்று லோடுமேனாகவே வந்து நிற்கிறார் விஷால். மருது, வழக்கமான விஷால் படச் சூத்திரத்தில் இருந்து துளியும் விலகாமல் இயக்கப்பட்ட படம். இடைவேளைக்கு முன்பு அமைதியின் சொரூபம் – இடைவேளைக்குப் பின்பு எரிமலை.

ராதாரவி, தாஸ், நமோ நாராயணன், மாரிமுத்து என்று ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில், சுரேஷைக் கலாய்க்கும் இடங்களில் எல்லாம் நமோ நாராயணனின் குசும்பு கொப்பளிக்கிறது. மனிதர் இதற்காகவே செய்யப்பட்டது போன்ற உடல்மொழியுடன் பட்டையைக் கிளப்புகிறார்.

முத்தையா என்றாலே சாதிப் படம் எடுக்கிறவர் என்கிற குற்றச்சாட்டிலிருந்து விலகி, நம்மூர் உறவுகளின் பின்னணியில் அற்புதமாகக் கையாண்டிருக்கவேண்டிய கதைக்களம். தமிழன் ஏதாவது ஒரு சாதிக்குள் அகப்பட்டு விழிபிதுங்குபவனாகவே இருக்கும் போது அவர் மட்டும் என்ன செய்துவிடமுடியும்..?

இந்தப் படத்தில் சூரி இருந்தும் அந்த அப்பத்தா ரொம்பவே அதிகமாகப் பேசுகிறார், பேசிக்கொண்டே இருக்கிறார். அப்பத்தாவைச் சாகடிக்கக் கையாளும் முறை பயங்கரமென்றால் , முகம் சுளிக்கவும் வைத்துவிடுகிறது.

செண்டிமெண்ட் படம் எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு, ஒவ்வொரு சீனிலும் ரத்தம் காட்டுகிறார் முத்தையா.

அட்மாஸ்பர் என்று சொல்லப்படும் காட்சிகள் மற்றும் நடிகர்கள் இந்தப் படத்தில் மிகவும் நேர்த்தியாகக் கையாளப்பட்டு இருக்கிறார்கள். நம்மாளுங்க எவனும் சோம்பேறி இல்லடா என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் துணை நடிகர்கள் பரபரப்பாக ஏதாவது வேலைசெய்துகொண்டே இருக்கிறார்கள், அதுவும் நமது மண் சார்ந்த விஷயங்கள் அற்புதம்.

இதே கதையை , கொஞ்சம் சரிசெய்யப்பட்ட திரைக்கதையோடும் காட்சியமைப்புகளோடும் படமாக்கியிருந்தால் மருது உலகளவில் நம் மண்ணின் கதை சொல்லும் யதார்த்த படமாக ஆகியிருக்கும்.

டைரக்‌ஷன் – இயக்கம் என்பது இதுவல்ல, மருது கதாபாத்திரமாக நிமிர்ந்து நின்றாலும் – படமாக தமிழ் சினிமாவிற்கு..?