கலைமகள், அலைமகள் , மலைமகள் மாதிரி மூன்று இறைவிகள் லட்சுமி – மியா ஜார்ஜ், காவ்யா – நிவேதா பெத்துராஜ் மற்றும் சுசீலாவாக ரித்விகா. இந்த மூவரின் மணவாழ்க்கை எப்படி அமைகிறது, கழுத்தில் தாலி ஏறுவதற்குள் இந்த மூன்று தேவியரும் எவ்வாறு கால்பந்தாடப்படுகிறார்கள் என்பதே ஒரு நாள் கூத்து.
நம்ம ஊர் நிறமாக இருப்பதாலோ என்னமோ தெரியவில்லை, ரசிகர்களை முதலில் கவர்வது ரேடியோ ஜாக்கியாக வரும்Nivetha-Balasaravanan-Dinesh ரித்விகா தான். கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்று நேயர்களுக்கு புல்லட் ரயில் வேகத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி அவர்களை மகிழ்வித்துக்கொண்டே, தன்னுடய இயலாமையை அல்லது தோல்விகளைக் கேளுங்க கேளுங்க என்று யாருக்கும் சொல்லாமல் ஒரு நிசப்தமான அமைதிக்குள் தன்னைப் புதைத்துக்கொள்ளும் அந்த மனவலிமை, அப்பப்பா, அப்படியே ரித்விகா வாழ்ந்துகாட்டிவிட்டார்.
தன்னுடைய காதல் தன் கண்முன்னே நொறுங்கிப்போய்விட்ட நிலையிலும், ராஜ் என்ன பேக் அப்பா..? என்று தன் காதலனையும் அவனுடைய காதலையும் கொசைப்படுத்திவிடாத நிவேதா, அட்டகாசம்.
தனக்கு முதன்முதலில் பெண்பார்க்கவரும் போது மணப்பெண் தோழியாக வரும் அந்த குட்டி அக்கா மகள், வளர்ந்து தனது பாய்பிரண்டுகளை மொபைலில் தேட ஆரம்பிக்கும் வரையிலும் தன்னைப்பெண் பார்க்க வருபவர்கள் முன் நடைப்பிணமாக வந்து நின்று கொண்டிருக்கும் தேவதை மியா ஜார்ஜ். என்னங்கடா நம்ம சிஸ்டம்..? என்று அலுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. நேரத்திலோ ஜாதகத்திலோ அல்ல, மியாவைக் கடைசியாகப் பெண்பார்க்கவரும் அபினவ்வின் அம்மாவின் கண்கள் போல இந்த சமூகத்தின் கண்களிலும் பெரிய கோளாறு இருப்பதை உணரமுடிகிறது. பெண்ணைப் பார்க்கும் முன் அவள் வீட்டு வசதிகளைத் தேடி அலையும் அவளது கண்கள் – உண்மையில் சமூகக்குருட்டிற்கு வழிவகுக்கும்.
கையில் கொஞ்சம் காசுவந்தவுடன், காதலுக்காகக் கண நேரத்தில் தனது அம்மா அப்பா தம்பி தங்கைகளை மறந்துவிட்டு அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு ஓடிப்போகும் இந்தக்கால இளைஞர்கள் மத்தியில், சாட்சாத் லட்சுமியே நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தன்னைத் திருமணம் செய்யத்தயாராகும் போது, நிராகரிக்கும் துணிச்சல் மிக்க தினேஷ். இந்தப் படத்தில் நிஜமாகவே வேற வேற தினேஷ். அவரது தோழன் பாலசரவணனும் அப்படித்தான் வேற வேற.
ரேடியோ ஜாக்கி என்கிற தனது நிஜ அவதாரத்தை இந்தப் படத்தில் எடுத்து அட்டகாசப்படுத்துகிறார் ரமேஷ் திலக்.
வழக்கம்போல நகைச்சுவை செய்துகொண்டிருக்காமல், பொறுப்பான அண்ணனாக வந்து நம்மையும் அவருடன் சேர்த்து சோகம்கொள்ளச் செய்யும் கருணாகரன், ஒருவிதமான பயத்தில் நிச்ச்யதார்த்தத்தை நிறுத்தத் துடிக்கும் ராகவேந்திரா, தனது இயல்பான துடுக்குத்தனத்தால் மனீஷாகொய்ராலாவைப் பெண்பார்க்கச் சென்ற அர்ஜுன் மாதிரி அபினவ், காலகாலத்தில் பயிர்செய்யமுடியாமல் விளை நிலங்களை விட்டுவிட்டு விலை நிலங்களைத் தேடிக்கொண்டிருக்கும் சார்லி என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது.
இத்தனை கதாபாத்திரங்களோடு, இவ்வளவு அழகான இளமை ததும்பும் கதையை அதன் உணர்வுகள் சிதைந்துவிடாமலும் கலகலப்பிற்குப் பஞ்சம் இல்லாமலும் இயக்குவது என்பது ஒரு சவால் தான், இயக்கிக் காட்டியிருக்கிறார் நெல்ல்சன் வெங்கடேசன். தாங்கள் தொடாத விஷயங்களைத் தொட்டுவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என்று பெரிய பெரிய ஜாம்பவான் இயக்குநர்களே , ஆச்சிரியப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அந்த கார்த்திக் சுப்புராஜே வியக்கும் அளவிற்கு ஒரு நாள் கூத்தை இயக்கியிருக்கிறார் நெல்சன் வெங்கடேசன் என்றால் அதுமிகையல்ல.
பொதுவாகவே குரு உச்சத்தில் இருப்பவர்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்கள், தனது குருவையே உச்சத்தில் தூக்கிவைத்துக்கொண்டு திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்துவைத்திருக்கும் நெல்சன் வெங்கடேசன் ஜெயித்திருப்பதில் வியப்பேதுமில்லை. ஆம், தனது குருவான பேராசிரியர் சங்கரதாஸை எழுத்தாளராக்கி பெருமை சேர்த்திருக்கிறார்.
இசை, ஜஸ்டின் பிரபாகர் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம், இசைவெளிச்சம் பாய்ச்ச வந்த இன்னொரு குட்டிசூரியன்.
ஒரு நாள் கூத்து திரையரங்குகளில் இனி தினம் தினம் கூத்துதான். கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார், நல்ல படைப்பத் தயாரித்திருக்கும் விதத்தில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.