இமான் அண்ணாச்சி தனது மேன்சனில் பல ஆண்டுகளாக வாடகையே குடுக்காமல் குடியிருப்பவர்களிடம் கறாராக நடந்துகொண்டு வாடகை வசூலிக்கவேண்டி, மயில்சாமி -பாண்டியை நியமிக்கிறார். அவரும் தனது கண்டிப்பான கடமையை ஆரம்பிக்க, சரக்கு வாங்கிக்கொடுத்து பரலோகம் அனுப்பிவிடுகிறார்கள் நாயகன் நிதின் சத்யா, சிங்கம்புலி, யோகி பாபு ஆகியோர். மயில்சாமியைக் கல்யாணம் கட்டிக்கொள்ளலாம் என்று இருந்த பெண்ணும் தற்கொலை செய்துகொள்ள, இருவரும் ஆவியாக வந்து மிரட்டுவதுதான் பாண்டியோட கலாட்டா தாங்கல.
வழக்கமான ஆவி – பேய் படங்களிலிருந்து பயமுறுத்தும் காட்சி அமைப்புகள்/தந்திர காட்சிகள் என்று எதுவும் வைக்காமல் நிதின் சத்யாவின் பொம்மைகளுக்குள் புகுந்து ஆவிகள் அட்டகாசம் செய்யுமாறு இயற்கையாக காட்சிகள் அமைத்து குழந்தைகளுக்கும் பிடிக்கும் அளவிற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்கு நர் எஸ் டி குணசேகரன். குழந்தைகளையே குறிவைத்து , விரசங்கள் இல்லாமல் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பாண்டியோட கலாட்டாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட ஏதுவாக இருந்திருக்கும்.
பெட்டிக்கடைகளில் மிட்டாய்களை போட்டு வைத்திருப்பது போல ஆவிகளை, பாட்டிலுக்குள் அடைத்து மனிதர்களை பாதுகாக்கும் மனோபாலா, கடைசியில் ஆவிகளிடமே மாட்டிக்கொண்டு முழிப்பது கலகல.
யோகி பாபு வந்து நின்றாலே சிரிக்கவைத்துவிடுகிறார். லூசுப்பெண்ணிடம் மாட்டிக்கொண்டு பின் அவளைக் கழட்டிவிடுவதும் அதிரடி நகைச்சுவை.
அழகான ரக்ஷா ராஜை சும்மா வந்து போக வைத்திருக்கிறார்கள்.
மரண கானா விஜியின் நீயும் பொம்மை நானும் பொம்மை டா.. நிறைய யோசிக்கவைக்கிறது.
படத்தலைப்பை டிசைன் செய்தது முதல் சுவரொட்டி -கிராபிக்ஸ் காட்சிகள் என்று மெனக்கெட்டிருப்பவர்கள் இன்னும் கொஞ்சம் அதிககாலங்கள் எடுத்துக்கொண்டு ஆறமர திரைக்கதை அமைத்திருக்கலாம். நல்ல கதைக்களம், கோட்டைவிட்டிருக்கிறார்கள், இமான் அண்ணாச்சி தனது மேன்சனை கோட்டை விடுவது போலவே!