தர்மதுரை – விமர்சனம்


டாக்டருக்கு படித்துவிட்டு கிராமத்தில் மருத்துவம் செய்ய விரும்பும் இளைஞனின் வாழ்க்கையை அவனது உடன்பிறப்புக்களே நாசமாக்க முயல்வதும், நட்புகள் அவனுக்கு கைகொடுத்து தூக்கிவிடுவதும் தான் இந்த ‘தர்மதுரை’ படத்தின் ஒருவரி கதை..

நான்கு அண்ணன் தம்பிகளில் இரண்டாவது ஆள் விஜய்சேதுபதி.. டாக்டருக்கு படித்துவிட்டு கிராமத்தில் வேலைபார்க்கும் விஜய்சேதுபதிக்கு கல்லூரியில் தன்னை விரும்பிய தமன்னா, சிருஷ்டி டாங்கே ஆகியோரைவிட, கிராமத்து வெள்ளந்திப்பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் பேரழகியாக தெரிகிறார்.. அவர் விருப்பப்படி அம்மா ராதிகா சம்பந்தம் பேசிமுடிக்க, தம்பிகளோ இருவருக்கும் தெரியாமல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்துகிறார்கள்

கல்யாணம் நின்றுபோன அவமானத்தில் ஐஸ்வர்யா தன்னை மாய்த்துக்கொள்ள, டாக்டர் தொழிலைவிட்டு குடிகாரனாக மாறுகிறார் விஜய்சேதுபதி.. அவரால் அண்ணன் தம்பிகளுக்கு தினமும் ஒரு பிரச்சனை ஏற்பட உடன்பிறந்தவர்களே அவரை கொல்ல முயல்கிறார்கள்.. அம்மா ராதிகா அவரை தப்பவைக்கிறார்.

தேனியில் இருந்து தப்பி தென்காசிக்கு ஓடும் விஜய்சேதுபதி அவரறியாமலேயே, தம்பி சௌந்தர்ராஜா பேக்கில் வைத்திருந்த ஊராரின் சீட்டுப்பணத்தையும் கொண்டுபோகிறார். இங்கே பணத்தை செட்டில் செய்ய முடியாமல் அண்ணன் தம்பிகள் நடுத்தெருவுக்கு வர, அங்கே தோழி தமன்னாவின் உதவியால் மீண்டும் மனிதனாக மாறி, மீண்டும் மருத்துவ தொழிலில் ஈடுபட ஆரம்பிக்கிறார்

பின்னர் பணம் தன்னிடம் இருப்பதை அறிந்து, ஆனால் ஊரில் நடந்த விஷயங்கள் ஏதும் தெரியாமல், கிராமத்துக்கு வருகிறார் விஜய்சேதுபதி.. விஷமுள்ளாக அவரை குத்துவதற்கு தயாராக காத்திருக்கின்றனர் அவரது உடன்பிறப்புகள்.. நடந்தது என்ன..?

மண்மணம் மாறாத கிராமத்து பின்னணியில் அழகாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி. மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கிராமத்து எளிய மக்களுக்காக தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நாயகன் தர்மதுரை கேரக்டரில் விஜய்சேதுபதி, காட்சிக்கு காட்சி காதல், நட்பு, பாசம், கோபம் என நவரச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மொத்தப்படத்திலும் இவரது சுமை அதிகம் என்றாலும் அழகாக சுமந்திருக்கிறார்.

சேலை கட்டிய கிராமத்து தமன்னாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நமக்கு பாக்கியமே. விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் உள்ளே நுழையும் தருணங்களில் மிகப்பிரமாதமான உணர்வுகளை கண்களிலேயே வெளிப்படுத்துகிறார் தமன்னா.. கல்லூரியில் விஜய்சேதுபதியை ஒருதலையாய் காதலித்து, படபடவென பேசும் சிருஷ்டி டாங்கேவுக்கு இந்த கேரக்டர் நிச்சயம் புதுசு.

கிராமத்து மயிலாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய்சேதுபதியை அண்ணா என அழைப்பதும், பிறகு அவருக்கே மனைவியாகப்போகும் சூழலில் சங்கோஜம் காட்டி பின்னர் மாமா என்று அழைப்பதுமாக வெள்ளந்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் யதரத்தமான கிராமத்து தந்தையை கண்முன் நிறுத்துகிறார்.

நான்கு பையன்கள் இருந்தாலும் விஜய்சேதுபதியின் மீது மட்டற்ற அன்பு கொண்ட அம்மாவாக நடித்துள்ள ராதிகாவின் நடிப்பில் என்ன குறை சொல்ல முடியும்..? சான்ஸே இல்லை.. அதிலும் விஜய்சேதுபதியை போலீசில் இருந்து தப்புவிக்க, தனது மற்ற இரு மகன்களை மாட்டிவிடுவது செம பஞ்ச். மாணவர்களை கிராமத்து மருத்துவப்பணியை நோக்கி திசைதிருப்பிவிடும் கல்லூரி புரபஷராக நீண்ட நாட்கள் கழித்து நிறைவான கேரக்டரில் நடித்திருக்கிறார் ராஜேஷ்.

அண்ணனாக அருள்தாசும் தம்பியாக எந்நேரமும் சலம்பல் பண்ணும் சௌந்திரராஜாவும் துணிப்பைத்த்தியமான இன்னொரு தம்பியும் பொருத்தமான தேர்வு.. கதையை நகர்த்த அழகாக உதவுகிறார்கள். அளவெடுத்து தைத்த சட்டை போல கஞ்சா கருப்புவின் காமெடி சரியான எல்லைக்குள் நின்று சிரிக்க வைக்கிறது. அவர் இதே பாணியை தொடரவேண்டும். விஜய்சேதுபதியின் அக்கா, மாமா இருவரும் சரியான தெற்கத்தி மனிதர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள்.

கதையோட்டத்துடன் இருந்து காட்சிக்கு காட்சி பார்வையாளர்களுக்கு விதவிதமான உணர்வுகளை கடத்துகிறது யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும்.. அதனுடன் ரயில் தண்டவாளம் போல இணைந்து பயணித்திருக்கும் சுகுமாரின் ஒளிப்பதிவு தென் மாவட்டங்களின் இயற்கை அழகை அள்ளி வந்திருகிறது.

ஒவ்வொரு காட்சியையும் அழகியலோடும் கோர்வையாகவும், தேவைப்படும் திருப்பங்களுடன், நெகிழ்ச்சியுடனும் வடிவமைத்து குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படமாக கொடுத்துள்ளார் சீனுராமசாமி..