சமீபத்தில் அமேரிக்கா சென்றிந்திருந்த சீயான் விக்ரம் அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் சேர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு வந்திருக்கிறார். ஆனால் விழாவில் தனது நடவடிக்கைகளால் சர்ச்சையை ஏற்படுத்தி, அங்குள்ள இந்தியர்கள் பலரின் மனக்கசப்பை சம்பாதித்துக்கொண்டு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி குறிப்பிட்டுள்ள அமெரிக்க தமிழ் சங்கத் தலைவரான பிரகாஷ் எம் சுவாமி, விக்ரமின் மோசமான நடவடிக்கைகள் பற்றி கழுவி ஊற்றியிருக்கிறார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “உங்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் விக்ரம். இந்தியர்களை அவமானப்படுத்தவும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கவும் நாங்கள் உங்களை அழைக்கவில்லை. உங்களது ரசிகர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களையும் கூட நீங்கள் ஏற்கவில்லை. ஏர் இந்தியாவின் முதல் வகுப்பில் உங்களை அழைத்து வந்தது, சுற்றிப் பார்க்க அல்ல, அவ்வளவு செலவு செய்தது அவமானத்தை அனுபவிக்க அல்ல. உங்கள் மீது வெட்கப்படுகிறோம்.
உங்களுடன் வந்த அபிஷேக் பச்சன் அனைவருடனும் நட்பாகப் பழகி, ரசிகர்களுடன் கைலுக்கிய போது, நீங்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர் போல நடந்து கொண்டீர்கள். உண்மையில் நாங்கள் பிரபுதேவாவைத்தான் அழைக்கலாம் என இருந்தோம். ஆனால், அவருடைய வேலைப்பளு காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
இதற்கு முன் இந்த இந்திய நாள் பரேட் நிகழ்வில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் மிகவும் எளிமையாகப் பழகினார்கள். ரசிகர்களை சந்திப்பதற்கும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கம் அவர்கள் தயங்கவேயில்லை.
விக்ரமை வெறும் 30, 40 பேர் சூழ்ந்ததற்கே அவர் இப்படி நடந்து கொண்டார், ஆனால், சரத்குமாரை ஒரு பெரும் கூட்டம் சூழ்ந்து கொண்டது, இருந்தாலும் அவருடைய பணிவான அன்பை நியூயார்க் மக்கள் மறக்க மாட்டார்கள். விக்ரம், நீங்கள் சரத்குமாரை விட தகுதியிலும், சீனியாரிட்டியிலும் பெரியவரா..?
அது மட்டுமல்ல, அழைப்பிதழில் ‘தென்னிந்திய சூப்பர் ஸ்டார்’ என கண்டிப்பாகப் போடச் சொன்னீர்கள். வெளிநாட்டு நிகழ்வுகளில் விக்ரமை அழைக்க அவர் தகுதியானவர் அல்ல. அவருக்கு புகழில் தான் ஒரு ரஜினிகாந்த், ஷாரூக்கான் என நினைப்பு” என இன்னும் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.
ஆனால் விக்ரம் தரப்பிலோ, “விக்ரமுக்கு அழைப்பு விடுத்தது பெடரேஷன் ஆஃப் இந்தியன் அசோஷியேசன் என்ற அமைப்பே தவிர தனிப்பட்ட மனிதரல்ல. விக்ரம் கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட மக்களும், ஒருங்கிணைப்பாளர்களும் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் என்ன நடந்தது என்பது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், அதில் கலந்து கொண்ட மக்களுக்கும் நன்றாகவே தெரியும். எனவே சிலர் பதிவு செய்யும் அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளை பெரிதுபடுத்த வேண்டாம்” என்று கூறப்படுகிறது..