நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக எந்த ஹீரோவை வைத்து படம் இயக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு நிலவிவந்த வேளையில் திடீரென சூர்யா படத்தை அவர் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓகே.. இப்போது விக்னேஷ் சிவன் மார்க்கெட் உள்ள குதிரை என்பதால் இது சாத்தியமான ஒன்றுதான்.
இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சூர்யா படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான் என்றாலும், இதன் பின்னணியில் ஒரு சமாதானப்படலம் ஒன்றும் நடந்ததாக சொல்கிறார்கள்.. அதாவது இப்போதுவரை கார்த்தி படங்கள் அனைத்தையும் தயாரித்து வருவது ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தான். அவ்வப்போது சூர்யா படங்களையும் தயாரிக்கிறது.
ஆனால் இதன் பங்குதாரர்களாக இருக்கும் மற்ற இரு தயாரிப்பளர்களும் ட்ரீம் வாரியர்ஸ், பொடென்ஷியல் என மற்ற இரண்டு நிறுவனங்களை ஆரம்பித்து படங்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. கார்த்திக்காகத்தான் இவர்கள் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. சூர்யாவும் தனது பங்கிற்கு 2டி என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து படங்களை தயாரித்து வருகிறார்..
சில மாதங்களுக்கு முன் அவர் நடிப்பில் வெளியான ‘24’ படம் கூட அவர் தயாரித்தது தான். தற்போது சூர்யா நடித்துவரும் ‘எஸ்-3’ மற்றும் கார்த்தியின் ‘காஷ்மோரா’ ஆகிய இரண்டு படங்களையும் ஸ்டுடியோகிரீன் தான் தயாரித்து வருகிறது.. ஆனாலும் இப்படி கார்த்தியும், சூர்யாவும் தனித்தனியாக படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டதால் இனி முன்போல ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில் நடிக்க மாட்டார்களோ என்கிற சந்தேகம் ஞானவேல்ராஜாவுக்கு எழுந்தது..
அதை போக்கும் விதமாகத்தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தை ஞானவேல்ராஜாவே தயாரிக்கட்டும் என சூர்யா சொல்லிவிட்டார்.. இதன்மூலம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் ஞானவேல்ராஜா.