இவ்வளவு நாளாக சூப்பர்ஸ்டாரின் பட டைட்டில்களை மட்டும் வாங்கி தங்களது படங்களுக்கு வைத்து பெருமையில் குளிர்காய்ந்து வருகிறார்கள் சிலர். ஆனால் இதுநாள்வரை அவரது பட டைட்டில்களில் வெளியான படங்களில் நியாயமான வெற்றியை தந்த ‘பில்லா’வும், நேர்மையான, மரியாதையான படம் என சொல்லும் அளவுக்கு ‘தர்மதுரை’யும் மட்டுமே அவரது பெயரை காப்பாற்றின.
இதில் பில்லா டைட்டிலுடன் சேர்த்து ஒரிஜினல் பில்லாவையே ரீமேக் செய்து எடுக்கப்பட்ட படம். தர்மதுரை படமோ ரஜினியிடம் இருந்து டைட்டிலை மட்டும் வாங்கி வெற்றிவாகை சூடிய படம்.. மற்றபடி மனிதன், முரட்டுக்காளை, ராஜாதிராஜா என ரஜினியின் டைட்டிலை வாங்கி, அதை நாசம் பண்ணவே செய்தார்கள் பலரும்..
இது போதாதென்று ரஜினி நடித்த ஒரிஜினல் சூப்பர்ஹிட்டான ‘மாப்பிள்ளை’ படத்தை டைட்டிலுடன் சேர்த்து ரீமேக் செய்தார் அவரது மருமகன் தனுஷ்.. ரிசல்ட் என்னாச்சு..? படம் பப்படம் ஆனதுதான் மிச்சம். இந்த கேப்பில் ‘தில்லுமுல்லு’ படத்தை மிர்ச்சி சிவாவை வைத்து ரீமேக் செய்த கூத்தும் நடந்தது.
சரி.. போனதெல்லாம் போகட்டும்.. இனியாவது ரஜினி படங்களை விட்டுவிடுவார்கள் என பார்த்தால் அடுத்ததாக ரஜினியின் மெகா ஹிட் படமான ‘மன்னன்’ படத்தை ரீமேக் செய்து நடிக்கப்போவதாக லாரன்ஸ் சொல்லியுள்ளாராம். இதற்கு முன்னதாக ‘மூன்றுமுகம்’ படத்தையும் அவர்தான் ரீமேக் செய்து நடித்துவருகிறார். இப்போது இதுவேறு சேர்ந்துகொண்டுள்ளது.
லாரன்ஸை பொறுத்தவரை தன்னுடைய ரூட்டில் பேய்ப்படங்களை நன்றாக இயக்கி வெற்றியும் பெற்று வருகிறார்.. ஆனால் சூப்பர்ஸ்டார் படத்தின் ரீமேக் என வரும்போது இன்னும் கவனம் அவசியம்.. அந்தவகையில் மாப்பிள்ளைக்கு நேர்ந்த கதை மன்னனுக்கு நேராமல் பார்த்துக்கொண்டால் சரி.