சூர்யா-ஹரி கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் சிங்கம் படம் வரிசையில் மூன்றாவதாக வெளியாகியுள்ள படம் தான் சி-3’.. இரண்டு படங்களில் ரசிகர்களை கட்டிப்போட்ட இந்த கூட்டணி இந்தப்படத்திலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறதா..?
இதுவரை தமிழ்நாட்டுக்குள் டீல் பண்ணிக்கொண்டிருந்த துரைசிங்கம் (சூர்யா) இந்தமுறை ஆந்திரா நகரம் ஒன்றில் போலீஸ் கமிஷனர் (ஜெயப்பிரகாஷ்) கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்காக சி.பி.ஐ ஆபீசராக வருகிறார். வந்த இடத்தில் தன்னை ஒரு மோசமான அதிகாரியாக சித்தரித்து, அதன்மூலம் அந்த கொலைக்கு காரணமான ஆந்திரா தாதா ரெட்டியை (சரத் சக்சேனா) நம்ப வைத்து ஆதாரங்களை திரட்டுகிறார்..
கமிஷனரை ஏன் கொன்றார்கள் என்கிற காரணத்தை ஆராயும் சூர்யாவுக்கு அதன் பின்னணியில் நம் நாட்டின் சுகாதாரத்துடன் விளையாடும் கும்பல் ஒன்று இருப்பது தெரிய வருகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கழிவுகளையும், எலெக்ட்ரானிக் கழிவுகளையும் இந்தியாவில் கொண்டுவந்து கொட்டுவதும், அதற்கு காரணமாக இருந்த ரெட்டியை எதிர்த்ததால் தான், கமிஷனரை அவர்கள் கொலை செய்ததையும் கண்டுபிடிக்கிறார்.
அதுமட்டுமல்ல அந்த கழிவுகளை இங்கே அனுப்புவதும், ரெட்டியை ஆஸ்திரேலியாவில் இருந்து ஆட்டுவிப்பதும் மத்திய மந்திரி சுமனின் மகனான பிசினஸ்மேன் விட்டல் (தாகூர் அனூப் சிங்) என்பதும் தெரிய வருகிறது..
முடிந்தால் என்னை தொட்டுப்பார் என இங்கே ரெட்டி சவால் விட, உன்னால் ஒன்றும் பண்ண முடியாது என ஆஸ்திரேலியாவில் இருந்து கொக்கரிக்கிறான் விட்டல். இவர்கள் இருவரையும் துரைசிங்கம் தனது பாணியில் எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் மீதிப்படம்.
இரண்டுமுறை தான் சிங்கம் என நிரூபித்த சூர்யா, இதில் மட்டும் சோடை போய்விடுவாரா என்ன..? மிரட்டி எடுக்கிறார் மனிதர். டெக்னாலஜி உதவியுடன் எதிரிகளை அவர் ட்ரெஸ் அவுட் பண்ணும் விதமும் தன்னுடைய புத்தி சாதுர்யத்தை வைத்து அவர்களை டார்கெட் பண்ணும் விதமும் துரைசிங்கம் சூர்யாவின் கம்பீரத்தை இன்னும் அதிகப்படுத்தி இருகின்றன.
ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில் அந்நாட்டு போலீஸார் சூர்யாவை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தும்போது, பழைய டேனி கதையைச்சொல்லி அவர்களை தனக்கு சல்யூட் பண்ணவைத்து பிளைட் ஏறும் காட்சியில் வில்லன் மட்டுமல்ல, நாமும் மிரண்டு போகிறோம்.
ஒருவழியாக சூர்யாவை திருமணம் செய்துகொண்ட அனுஷ்கா, இந்தப்படத்தில் தேவையான இடங்களில் தரிசனம் தந்து ஆனால் படம் முழுவதும் வரும் விதமாக தனது பங்கை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார்… இந்தப்படத்தின் புதிய வரவு ஸ்ருதிஹாசன்.. சிங்கம்-2 ஹன்ஷிகா போலவே இவரது கேரக்டரும் சூர்யா பின்னாடி ‘லவ்’வாகி சுற்றுவதெல்லாம் கதையோட்டத்தில் பார்க்கும்போது சில இடங்களில் மட்டும் கொஞ்சம் ஓவர்டோஸ் என்றே தோன்றுகிறது.
உள்ளூர் வில்லன் சரத் சக்சேனா வழக்கம்போல உதார் விட்டு, ஜபர்தஸ்து காட்டுகிறார் என்றால், வெளிநாட்டு வில்லனாக தாகூர் அனூப் சிங் பணக்கார தோரணையில் அலட்சியம் காட்டுவதிலும் உருட்டல் மிரட்டலிலும் ஹைடெக் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.
சூர்யாவின் போலீஸ் ஸ்டேஷன் நண்பர்களாக சூரி, க்ரிஷ், ரோபோ ஷங்கர், சாம்ஸ் கூட்டணி அதிரடி வேக திரைக்கதையில் ஆங்காங்கே ரிலாக்ஸ் பண்ண வைக்கிறது. இமான் அண்ணாச்சியும் இரண்டு காட்சிகளில் தன் வரவை பதிவு செய்கிறார். இந்தப்படத்தில் நிதின்சத்யா கேரக்டரை மிக அழகாக ரசிகர்களிடம் கைதட்டலை அள்ளும்படியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
நட்புக்காக இரண்டு காட்சிகளில் வந்துபோகும் ராதிகா, ஜெயபிரகாஷ், சுமன், ஜோ மல்லூரி, பிரேம் முதற்கொண்டு, முதல் பாகத்து மனிதர்களான ராதாரவி, நாசர், தியாகு என அணிவகுக்கும் நட்சத்திர பட்டாளம் படத்தின் யதார்த்தத்தை அப்படியே தாங்கிப்பிடித்துள்ளனர்..
பாடல் காட்சிகளில் ஹாரிஸ் நம்மை சோதித்தாலும், பரபரக்கும் காட்சிகளுடன் இணைந்து பயணிக்கும் பின்னணி இசை மிகப்பெரிய பலம் என்பது மறுக்க முடியாத உண்மை.. ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஹரியின் வேகத்தை மிஞ்சுவதுடன்,.. ஆந்திரா, ஆஸ்திரேலியா என இரண்டு ஏரியாக்களிலும் இரண்டுவிதமான டோன்களில் பயணித்திருக்கிறார்.
இயக்குனர் ஹரியை பற்றியும் அவரது வேகமான திரைக்கதை பற்றியும் புதிதாக நாம் எதுவும் சொல்ல தேவையில்லை. வழக்கமாக முதல் பாகத்தில் வேகம் காட்டியவர்கள் இரண்டாம் பாகத்தில் சுணங்கியிருப்பர்கள்.. மூன்றாவது பாகம் என்றால் விறுவிறுப்பே காணாமல் போய்விடுவதும் உண்டு.. ஆனால் இயக்குனர் ஹரி முந்தைய இரண்டு பாகங்களில் காட்டிய மெனக்கெடலை விட அதிகமான சிரத்தையை இதில் காட்டியுள்ளார்.. அந்த சிரத்தையும் உழைப்பும் இந்தப்படத்தின் வெற்றியை உறுதி செய்தும் விட்டது.
முதல் இரண்டு பாகங்களின் வேகத்திற்கும் விறுவிறுப்புக்கும் எந்த குறையும் வைக்காமல், சொல்லாப்போனால் இன்னும் ஒரு பங்கு ஜாஸ்தியாக பரபரக்க வைக்கும் திரைக்கதையால் நம்மை உற்சாகப்படுத்தி இருக்கும் ஹரி-சூர்யா கூட்டணிக்கு பலமாக ஒரு ‘ஓ’ போடுவோம்.