சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி வெளியாகின்றது.
“இதுவரை இது போன்ற கற்பனை கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் தமிழ் படங்களில், நாய், பூனை, குரங்கு, யானை போன்றவைகளை தான் ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள். ஆனால் எங்களின் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் முதல் முறையாக அவர்கள் ஒரு உயிருள்ள மீன், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்க போகிறார்கள். சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் சிறந்த நடிப்பும், மணி சேயோனின் அற்புதமான நகைச்சுவை கதையம்சமும் இணைந்து, நிச்சயமாக ரசிகர்களை வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்றி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். சமூக வலைத்தளங்களில் அமோக பாராட்டுகளை பெற்று இருக்கிறது எங்கள் படத்தின் டீசர். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் சிறந்த ஒரு வரவேற்பை எங்கள் ‘கட்டப்பாவ காணோம்’ பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்று உற்சாகமாக ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் கூறுகிறார் மதுசூதனன் கார்த்திக்.