விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் சேரன் ஒரு பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் விஷாலின் மீதுள்ள தனது அத்தனை வெறுப்பையும் இறக்கி வைத்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது.. ஆனால் சேரன் இதே நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பாரா என்கிற கேள்வியும் எழவே செய்கிறது. அதற்கு காரணமும் இருக்கிறது.
இயக்குனர் சேரனுக்கு உணர்ச்சிவசப்பட்டால் தான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது. இஷ்டத்துக்கு பேசுவார்.. சில வருடங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இயக்குனர்கள் சங்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் இவரும் கண்டபடி பொங்கினார். ஆனால் இவர் எஸ்கேப் ஆக முழு டார்கெட்டும் கடைசியாக பேசிய சீமான் பக்கம் திரும்பியது.
அதன்பின் கடந்த நடிகர்சங்க தேர்தலில் சரத்குமார் அணிக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தில் பேசிய சேரன், விஷால் – கார்த்தி இருவரையும் வறுத்தெடுத்தார் நீங்க போய் நல்ல நடிக்க கத்துக்கிட்டு வாங்க.. அப்புறம் பதவிக்கு ஆசைப்படலாம் என்றார். ஆனால் விஷால் அணி வெற்றிபெற்ற பின் “விஷால், கார்த்தி மீது இருந்த தனிப்பட்ட வெறுப்பினால்தான் அன்றைக்கு அவர்களை தாக்கி பேசினேன்.. மற்றபடி நான் பாண்டவர் அணிக்கு எதிரானவன் இல்லை” என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து பல்டி அடித்தார்..
சரி அப்படியென்ன இருவர் மீதும் தனிப்பட்ட வெறுப்பு..? சில வருடங்களுக்கு முன் விஷாலிடம் கதைசொல்லிவிட்டு கால்ஷீட் கேட்டாராம் சேரன். முதலில் தருவதாக சொன்ன விஷால் அதன்பின் பதிலேதும் சொல்லவில்லையாம்.. அதேபோல கார்த்தியிடமும் அண்ணன் தங்கை கதை ஒன்றை சொன்னாராம்.. அவரும் இதேபோல பதில் கூறாமல் நழுவிட்டாராம்..
இன்னொரு முறை திருட்டு விசிடி பிரச்சனையில் விஷால் தட்டிக்கேட்டதை இவர் பாராட்டினாராம். ஆனால் இவர் ஆரம்பித்த சி2எச் நிறுவனத்தை விஷால் பாராட்டவில்லையாம். அதனால் நான் பாராட்டினேனே, நீ ஏன் என்னை பாராட்டவில்லை என்கிற கோபமும் இருந்து வந்திருக்கிறது.
இந்த மொத்த கோபமும் சேர்ந்துதான் இப்போது சேரனை மீண்டும் வெடிக்க வைத்திருக்கிறது என்கிறார்கள் திரையுலகினரில் உள்ள சிலர். எல்லாம் சரி.. ஒருவேளை விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெற்றிபெற்று தலைவராகவிட்டால், அப்போதும் இதேபோல பல்டி அடிக்காமல் இருப்பாரா சேரன் எனவும் அவர்கள் பேசிக்கொள்வதை கேட்க முடிந்தது. சேரன் இப்போது இந்த அறிக்கையை வெளியிட காரணமே அவரது அடுத்த படத்திற்கு விஜய்சேதுபதி ஹீரோவாக கிடைத்துவிட்டார் என்கிற மிதப்பில் தான் என்றும் சொல்லப்படுகிறது.